தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2023, 7:59 am

DIN

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14.10.2023 அன்று IND-TN-MM-237, IND-TN-10-MM-970, IND-TN-10-MM-56 மற்றும் IND-TN-10-MM-708 ஆகிய பதிவு எண்கள் கொண்ட 4 மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களும், மற்றொரு சம்பவத்தில் IND-TN-11-MM-726 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர் இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாயக் குடும்பத்தினருக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு, இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.