3 கொலைகள்: இறந்ததாக நடித்து 20 ஆண்டுகளாக தப்பித்தவர் கைது!

மூன்று பேரைக் கொடூரமாக கொலை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்தவர் 20 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலேஷ் குமார்
பாலேஷ் குமார்

2004-ஆம் ஆண்டு தில்லியின் பவானா பகுதியில் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். முன்னாள் கடற்படை ஊழியரான பாலேஷ் குமார் என்பவரின் மனைவி ராஜேஷுடன் தகாத உறவில் இருந்ததால், அவரது கணவர் பாலேஷ் குமார் ராஜேஷை கொலை செய்ததாக கருதப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, கொலையாளி பாலேஷ் குமார் சரக்கு வாகனத்தில் ஜோத்பூர் சென்றபோது அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் அவரும் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் இந்த வழக்கின் விசாரணையை முடித்து வைத்தனர். 

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு பிறகு புதிய திருப்பமாக, இந்த வழக்கின் குற்றவாளியான பாலேஷ் குமார் இறக்கவில்லை என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

63 வயதான வியாபாரி அமன் சிங் என்பவர் இரண்டு ஊழியர்களை எரித்துக் கொன்று போலியாக அவரது மரணத்தை சித்தரித்துள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்பட்ட பாலேஷ் குமார்தான் அமன் சிங் எனவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர். 

குமாரின் மனைவிக்கு, அவரது கணவர் இறக்கவில்லை என்ற தகவல் தெரிந்திருந்தும் அதை மறைத்து, அவரது கணவர் இறந்ததற்கான பணப் பலன்களை அனுபவித்து வந்துள்ளார். 20 ஆண்டுகளாக அவரது கணவரின் கடற்படை ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார் என காவல்துறையினர் கூறினர். 

“பாலேஷ் குமார் அவரது மரணத்தை போலியாக சித்தரிப்பதற்காக, அவர் உயரத்தில் அவரைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவரையும், மேலும் ஒருவரையும் பணிக்கு அமர்த்தி இருக்கிறார். அவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று மது அருந்த வைத்துள்ளார். பின்பு மதுபோதையில் இருந்த இருவரையும் வாகனத்தில் வைத்து உயிரோடு கொளுத்தியுள்ளார். பாலேஷ் குமார் ஒரு கொலைக் குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக சதித் திட்டம் தீட்டி,  மேலும் இரண்டு கொலைகளை கொடூரமாக செய்துள்ளார்” என்று குற்றப்பிரிவு சிறப்புக் காவல் ஆணையாளர் ரவீந்திர யாதவ் தெரிவித்தார். 

எரிந்த இரண்டு உடல்களில் ஒன்று பாலேஷ் குமாருடையது என்று தோன்றும் வகையிலான தடயங்களை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அதன்பின் வேறு அடையாளத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் இறந்துவிட்டதாக அனுப்பப்பட்ட ஓய்வூதியப் பலன்களை இவரின் மனைவி தொடர்ந்து பெற்று வந்திருக்கிறார்.

தற்போது இவர்களின் சுதந்திர வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ராஜேஷைக் கொலை செய்த வழக்கை தவிர்த்து, பழைய திருட்டு வழக்கு ஒன்றின் மூலமாக தற்போது சிக்கியுள்ளார் பாலேஷ் குமார். 2000-ஆம் ஆண்டு இவர் மீது திலக் மார்க் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மஹக் சிங் இவர் பற்றிய தகவல்களைக் கண்காணித்தபோது, பாலேஷ் குமார் சிக்கியுள்ளார்.

பாலேஷ் குமார் என்ற பெயரை அமன் சிங் என மாற்றியது மட்டுமில்லாமல், பல்வேறு போலியான சான்றுகளைக் கொடுத்து ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.

இந்த சதிச்செயல்களில் உடனிருந்த குமாரின் மனைவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவருக்கு ராஜேஷை அவரது கொலை செய்த தகவல் மட்டுமல்லாமல் அவரது கணவர் செய்த மற்ற குற்றங்களும் தெரிந்திருக்கிறது. இருந்தபோதிலும் அவர் அனைத்து தகவல்களையும் மறைத்துள்ளார். 

துணை காவல் ஆணையாளர் அங்கித் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர். பாலேஷ் குமார் ஏற்கனவே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், அவரது மனைவிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாதவாறு கைது செய்ய உத்தரவு கோரி காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com