சிறப்புச் செயல்பாடுகளுக்கான மத்திய உள்துறை அமைச்சர் விருது: தமிழகம் உள்பட 204 காவல் துறையினர் பெயர்கள் அறிவிப்பு

உள்நாட்டுப் பாதுகாப்பின் தீவிர செயல்பாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 2023 - ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 204 பேர் பெயர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.
Updated on
1 min read

உள்நாட்டுப் பாதுகாப்பின் தீவிர செயல்பாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 2023 - ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 204 பேர் பெயர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகம் உள்பட 10 மாநில காவல் துறையினர், மத்திய அரசின் 3 பிரிவு அதிகாரிகள், மணிப்பூர் காவல் துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.  
தமிழக காவல்துறையில் 3 காவல் 
கண்காணிப்பாளர்கள், 4 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை பாதுகாப்பு நடவடிக்கை, ஆயுதக் கட்டுப்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு,  மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் சிறப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 
உள்நாட்டுப் பாதுகாப்பில் பரந்த அளவில் திட்டமிடல்,  சமூகத்தின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் இந்தப் பதக்கம் 2018-ஆம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சர் பெயரில் வழங்கப்படுகிறது.
சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள், தேசிய ஒற்றுமை நாள் ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 31- ஆம் தேதி இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.  
நிகழாண்டில் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்று, தற்போது மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎஃப்) பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அமித் குமார், இதே படைப் பிரிவில் பணியாற்றி பின்னர் மணிப்பூர்  இனக் கலவரத்தை முன்னிட்டு அந்த மாநில இயக்குநர் ஜெனரலாக (டிஜிபி) நியமிக்கப்பட்ட ராஜீவ் சிங் போன்றவர்கள் உள்ளிட்ட 51 சிஆர்பிஎஃப் அதிகாரிகள் விருது பெற்றுள்ளனர். 
மத்திய அரசின் தேசிய புலனாய்வு பிரிவில் 9 பேரும், பஞ்சாபில் மிக முக்கிய ஆப்பரஷேன்களை மேற்கொண்ட தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்  (என்சிபி)  14  பேரும் இதில் அடங்குவர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் முழு செயல்பாட்டை முடக்கியது, வன்முறையில் ஈடுபடுவேரின் செயல்பாடுகளை முடக்கியது உள்ளிட்டவற்றுக்கு 19 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு: காவல்துறை கண்காணிப்பாளர்கள் அரா.அருளரசு, என். ஸ்டீபன் ஜேசுபாதம், வி. சரவணக்குமார்; காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஜி.கார்த்திகேயன், 
டி.வீமராஜ், சி.கோகிலா, பி.சுந்தரம்;  காவல் ஆய்வாளர்கள் கே. மஞ்சுளா, பி.எஸ். சுந்தர் குமார், ஆர்.பிரேமா; காவல் துணை ஆய்வாளர்கள் ஜி. சங்கர்நாராயணன், டி.ஞானேஸ்வரன், வி. சிற்றரசு; தலைமைக் காவலர்கள்  எஸ்.பிரசாத் , ஜி. டில்லிபாபு, கே.சரிதா; காவலர்கள் ஆர்.கிஷோர் குமார், வி.பாஸ்கர், கே. ஜான் பெனடிட் உள்ளிட்ட 19 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டுப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மத்திய அமைப்புகள், ஆந்திரம், அஸ்ஸôம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட  10 மாநிலங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் முதல் காவலர்கள், ஓட்டுநர் வரை என 204 பேர் பெயர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com