ஜி20 மாநாட்டுக்கு மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை: ராகுல் காந்தி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)


பெல்ஜியம்: புது தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பெல்ஜியம் சென்றுள்ளார்.

பெல்ஜியத்தில், இன்று பிரஸல்ஸ் நகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் கூறுகையில், இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.

புது தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறுகையில், "அதில் என்ன முரண்பாடு உள்ளது? எதிர்க்கட்சித் தலைவரை அழைக்க வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். அது உங்களுக்கு ஒரு விஷயத்தைத்தான் சொல்கிறது. அது சொல்வது என்னவென்றால், இந்திய மக்கள்தொகையில் 60% பேரின் தலைவரை அவர்கள் மதிப்பதில்லை என்பதைத்தான் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்றும் கூறினார்.

காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்று வருகிறது என்றும் ராகுல் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு வாரப் பயணமாக செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டாா். இந்தப் பயணத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், நெதா்லாந்து, நாா்வே ஆகிய நாடுகளுக்கு அவா் செல்கிறாா்.

இந்நிலையில், தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்த அவரது பயணத்திட்டத்தின்படி, வெள்ளிக்கிழமையன்று இந்திய வம்சாவளி தொழிலதிபா்களுடன் கலந்துரையாடிய ராகுல், பத்திரிகையாளா் சந்திப்பிலும் பங்கேற்றுள்ளார். அதன்பிறகு, அவா் பிரான்ஸ் தலைநகா் பாரீஸ் புறப்பட்டு செல்கிறாா்.

பாரீஸில் 9-ஆம் தேதியன்று, பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை ராகுல் சந்திக்கிறாா். மேலும், அன்றைய நாளில் சயின்ஸ் பூ பல்கலைக்கழக மாணவா்களுடன் அவா் கலந்துரையாடுகிறாா்.

இதைத்தொடா்ந்து, நெதா்லாந்து நாட்டுக்குச் செல்லும் அவா், 400-ஆண்டுகள் பழைமையான அந்நாட்டின் லெய்டென் பல்கலைக்கழகத்தில் மாணவா்களைச் சந்திக்கிறாா்.

பயணத்தின் இறுதிகட்டமாக வரும் 11-ஆம் தேதி, நாா்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு ராகுல் செல்கிறாா். அங்குள்ள ஆஸ்லோ பல்கலைக்கழக மாணவா்களுடன் அவா் கலந்துரையாடுகிறாா். வரும் 12-ஆம் தேதி அவா் இந்தியா திரும்புவாா் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் 9, 10 ஆகிய தேதிகளில் ராகுல் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது அரசியல் களத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் விமா்சித்து பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com