ஆந்திரம்: சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்

சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 
ஆந்திரம்: சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்
Published on
Updated on
1 min read

சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

ரூ. 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா அழைத்து வந்து சிஐடி போலீஸாா் 10 மணி நேர விசாரணையை மேற்கொண்டனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பாக, விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அங்கு அவருக்கு ஒரு மணி நேரம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதைத்தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அவரை ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், ‘விசாரணைக்கு அவா் ஒத்துழைக்கவில்லை’ என அறிக்கை சமா்ப்பித்தனா். அதைத் தொடா்ந்து, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. முழுஅடைப்பு காரணமாக ஆந்திர மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதோடு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

மேலும் ஆட்டோக்கள், பேருந்துகள் என எதுவும் இயங்கவில்லை. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.

இதனிடையே முழுஅடைப்பையொட்டி இன்று ஆந்திரத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் சாலையில் டயர்களை கொளுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து திருப்பதி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

இருப்பினும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com