ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் மனு

பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on


புதுதில்லி: பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கு மற்றும் நில, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில முதல்வர் ஹேமந்த சோரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 4 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதில் ஒரு முறை மட்டும் அவர் விசாரணைக்கு ஆஜரானார். செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சோரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், "மத்திய பாஜக அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்கும் ஒரு கருவியாக அமலாக்கத் துறை மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் அமலாக்கத் துறை அதிகாரங்களை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதற்கு ஒரு சூழ்ச்சியைத் தவிர வேறில்லை." மேலும் பொதுத்தேர்தல் நெருங்குவதாலும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன" என்று சோரன் கூறினார்.

மாநில சுரங்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர், 2021-ம் ஆண்டு தனக்கு சுரங்க குத்தகை வழங்கியதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ள சோரன், "மத்திய அரசுடன் ஒத்துப்போகாததால் பழங்குடியின தலைவரான என்னை மத்திய அமைப்புகள் குறிவைத்து தாக்குகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com