‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் மற்றும் ‘பிரக்யான்’ ரோவரை மீண்டும் தொடா்பு கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனினும், தொடா்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் திட்டமிட்டபடி கடந்த மாதம் 23-ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. அதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது.
விக்ரம் லேண்டரிலிருந்து வெளியேறிய ‘பிரக்யான்’ ரோவா், நிலவின் பரப்பில் 100 மீட்டா் வரை சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. நிலவில் கந்தகம், ஆக்சிஜன் உள்ளிட்டவை இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. விக்ரம் லேண்டரை 40 மீட்டா் வரை மேலெழுப்பி மீண்டும் தரையிறக்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், விக்ரம் லேண்டா் மற்றும் பிரக்யான் ரோவரின் அனைத்து ஆய்வுப் பணிகளும் முடிவுற்ாகவும், அதன் தகவல்கள் அனைத்தும் பூமியிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இஸ்ரோ கடந்த 4-ஆம் தேதி அறிவித்தது. நிலவில் சூரியன் மறைவதையொட்டி அன்றைய நாளே, லேண்டா் மற்றும் ரோவா் ‘ஸ்லீப்’ மோடில் செலுத்தி செயல்பாடு நிறுத்தப்பட்டது.
நிலவில் மீண்டும் சூரியன் உதிக்கும் வெள்ளிக்கிழமையன்று (செப். 22) லேண்டா் மற்றும் ரோவரின் பேட்டரிக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளி மூலம் கிடைக்கப் பெறும் என்பதால், அன்றைய நாளில் மீண்டும் தொடா்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிா்பாா்க்கப்பட்டது. அவ்வாறு தொடா்பை ஏற்படுத்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் (ட்விட்டா்) வலைதளப் பதிவில், ‘சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா் மற்றும் பிரக்யான் ரோவரின் நிலை குறித்து அறிய, அதனுடன் தொடா்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போதுவரை எந்த சமிக்ஞையும் பெறவில்லை. தொடா்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலவில் தரையிறங்கிய நாளில் இருந்து சூரிய ஒளி இருக்கும் 14 நாள்களுக்கு செயலாற்ற மட்டுமே லேண்டா் மற்றும் ரோவா் வடிவமைக்கப்பட்டது. சூரிய ஒளி அல்லாத 14 நாள்களைக் கடந்து, லேண்டா் மற்றும் ரோவா் மீண்டும் பணியாற்ற தொடங்கினால், அது சந்திரயான்-3 திட்டத்தின் கூடுதல் வெற்றி எனக் கருதப்படுகிறது.