நாடாளுமன்றத்தில் சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்பியை விமா்சனம் செய்த பாஜக எம்பி ரமேஷ் பிதூரியிடம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விசாரணை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், மக்களவையில் வியாழக்கிழமை இரவு சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினா் குன்வா் டேனிஷ் அலி குறித்து பிதூரி சா்ச்சைக்குரிய வகையில் விமா்சனம் செய்தாா். அவா் சாா்ந்த மத அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளையும் தெரிவித்தாா். இவருடைய கருத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, பிதூரியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘அவருடைய கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.
மேலும், பிதூரி மீது மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எனது எம்பி பதவியை ராஜிநாமா செய்வேன் என்று டேனிஷ் அலி தெரிவித்தார்.
இந்த நிலையில், ரமேஷ் பிதூரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி பாஜக சார்பில் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, தில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ஜெ.பி.நட்டாவை சந்தித்து பிதூரி விளக்கம் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.