இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து, பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் வட-மேற்கு இந்திய மாநிலங்களிலிருந்து தென்மேற்குப் பருவமழை இன்று விலக தொடங்கியுள்ளது.
மேலும், படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்குப் பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையானது கடந்த ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி படிப்படியாக ஜூலை 8ஆம் தேதி இதர மாநிலங்களுக்கும் முழுமையாக பரவியது. இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்தமாக பருவமழை விடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தென்மேற்கு பருவமழைக் காலத்தில், இந்தியாவில் 780.3 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இயல்பான அளவு 832.4 மி.மீ. ஆகும்.