6 மாதம்தான் இருப்பேன், புற்றுநோய் பற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டாம்.. சிறுவனின் தீரம்

எனக்கு புற்றுநோய் இருப்பதை எனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று ஆறு வயது சிறுவன் மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தது வைரலாகியிருக்கிறது.
6 மாதம்தான் இருப்பேன், புற்றுநோய் பற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டாம்.. சிறுவனின் துயரக் கதை
6 மாதம்தான் இருப்பேன், புற்றுநோய் பற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டாம்.. சிறுவனின் துயரக் கதை


ஹைதராபாத்: நான் வெறும் ஆறு மாதங்கள்தான் உயிரோடு இருப்பேன். எனவே, எனக்கு புற்றுநோய் இருப்பதை எனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று ஆறு வயது சிறுவன் மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தது தொடர்பான துயரக் கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

மிகக் குறைந்த ஆயுள் கொண்ட மனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவனின் அசாத்திய தைரியமும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில், தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு பல லட்சம் மக்களால் படிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நரம்பியல்துறை டாக்டர் சுதிர் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அது ஒரு பிஸியான நாள். ஒரு இளம் தம்பதி எனது அறைக்கு வந்து என்னை சந்தித்தனர்.

அவர்கள் ஒரு விநோதமான கோரிக்கையை என்னிடம் வைத்தார். "மனு வெளியில் காத்திருக்கிறார், அவருக்கு புற்றுநோய் உள்ளது, ஆனால் இதுவரை அவரிடம் அதுபற்றி  நாங்கள் சொல்லவில்லை" என்றார்கள்.

மனுவுக்கு அப்போது ஆறு வயதுதான்.

அவனுக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் குறித்து மட்டும் அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஆனால், அவனது நோய் பற்றி அவனிடம் சொல்ல வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நானும் அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தலையை ஆட்டினேன்.

பிறகு சக்கர நாற்காலியில் மனுவை என் அறைக்கு அழைத்து வந்தார்கள். அவரது மருத்துவர், என்னை சந்திக்கும்படி பரிந்துரைத்திருந்தார்.

என்னைப் பார்த்ததும் மனு புன்னகைத்தான். அவனது முகத்தில் ஒரு நம்பிக்கையும் அறிவுக்கூர்மையும் தெரிந்தது என்று அன்றைய நிகழ்வை மருத்துவர் நினைவுகூர்ந்தார்.

மனுவின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைப் படித்துப் பார்த்த போதுதான், சிறுவனின் இடதுப் பக்க மூளையானது  க்ளையோபிளாஸ்டோமா மல்டிஃபோர்ம் 4ஆம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக அவனது வலது கை மற்றும் கால்கள் செயலிழந்துபோயிருப்பதை அறிந்து கொண்டேன்.

அதன்பிறகு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கீமோதெரபி பெற்று வந்தார். இவை அனைத்தும் நடந்தது அவனுக்கு நடந்தது மூளைப் புற்றுநோயால்தான்.

அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பெற்றோரிடம் பேசினேன், அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தேன். 

பிறகு மருத்துவரிடம் தான் தனியாகப் பேச வேண்டும் என்று மனு கேட்டுக் கொண்டதால், அவனது பெற்றோர் என் அறையிலிருந்து வெளியேறினார்கள். மகனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள்.

என் அறையை விட்டு பெற்றோர் வெளியேறியதும், மனு என்னிடம் பேசத் தொடங்கினான். "டாக்டர், எனக்கு வந்திருக்கும் நோய் பற்றி என் ஐபேட் மூலம் முழுமையாக படித்துத் தெரிந்து கொண்டேன். அது மட்டுமல்ல, இன்னும்  6 மாதங்கள் மட்டுமே நான் உயிரோடு இருப்பேன் என்பதையும் அறிந்தே இருக்கிறேன். ஆனால் இது பற்றி எனது பெற்றோரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் மனம் வருந்துவார்கள் என்பதால்தான். அவர்கள் என் மீது மிகுந்த அன்பை வைத்திருக்கிறார்கள். தயவு செய்து இது பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டாம்" என்று மனு சொல்லி முடித்தான்.


இதைக் கேட்ட என்னால் ஒரு சில வினாடிகளுக்கு பேச முடியாமல் போனது. என்னை நான் சுதாரித்துக் கொண்டேன், சிறுவன் பேசியது என்ன என்று என் நினைவலைகள் திரும்பக் கேட்டுப் பார்த்தது. அது சரியாகத்தான் என்னால் கேட்கப்பட்டதா என்று ஆயிரம் கேள்விகள். பிறகு சிறுவனின் அந்த உறுதியான முகத்தைப் பார்த்து, நிச்சயமாக, நீ சொன்னதை நான் நிறைவேற்றுவேன் என்று மனுவிடம் கூறினேன்.

பிறகு, மனுவை வெளியே அமரச் சொல்லிவிட்டு, பெற்றோரிடம் நான் பேசினேன். மனு என்னிடம் சொன்ன அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். ஒரு சிறுவனுக்கு நான் அளித்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. காரணம், ஒரே இடத்தில் ஒரு குடும்பம் நின்று கொண்டிருப்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன்.

இதனால், அவர்கள் இருக்கும் நாள்களை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமல்ல, மனுவுக்கு தனது உடல்நிலை குறித்து தெரியும். எனவே, அது பற்றி பெற்றோர் கவலைப்பட வேண்டாம். உண்மையான நிதர்சனம் அவனுக்குப் புரிந்திருக்கிறது. அவன் இன்னும் உறுதியாக மாறியிருக்கிறான் என்பதை மருத்துவர் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், பெரியவர்கள் என்றால் பெரும்பாலும் சத்தியத்தை காப்பாற்றலாம். ஆனால் எச்ஐவி போன்ற நோய் ஏற்படும் போது நோயாளியின் நிலை குறித்து நிச்சயம் அவர்களது வாழ்க்கைத் துணைக்குத் தெரிவிப்போம். ஏனென்றால் அது பற்றி அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த சிறுவனின் விஷயத்தில் சின்ன நோயாக இருந்தாலும் சரி மிக மோசமானதாக இருந்தாலும் சரி பெற்றோரிடம் தெரிவித்துத்தான் ஆக வேண்டும்.

நான் சொல்வதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத பெற்றோர், என் அறையிலிருந்து செல்லும் போது எனக்கு நன்று சொல்லவிட்டு அவர்களது கனத்த இதயத்தை என் அறையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

சுமார் 9 மாதங்கள் கடந்துவிட்டன. மனுவை நான் மறந்தேவிட்டேன். ஒரு நாள் அதே தம்பதி என்னைப் பார்க்க வந்தார்கள். மனுவைப் பற்றி விசாரித்தேன்.

உங்களைப் பார்த்துவிட்டு திரும்பிய பிறகு எங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டோம். அவன் டிஸ்னிலேன்டைப் பார்க்க விரும்பினான். அங்கு அழைத்துச் சென்றோம். இருவருமே பணிக்கு தற்காலிகமாக விடுப்பு எடுத்துவிட்டு அவனுடன் இருந்தோம்.

ஒரு மாதத்துக்கு முன்பு மனு எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.  இன்று உங்களைப் பார்க்க வந்தது. எங்களுக்கு மிகச் சிறந்த 8 மாதங்களை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்வதற்காகத்தான் என்று சொல்லி கண்கலங்கினர்.

இங்கே பெற்றோரும் சரி, பிள்ளையும் சரி என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். ஆனால், இதுவே உண்மையை மறைத்துவிட்டு ஒருவரோடு ஒருவர் வாழும் போது அந்த உண்மை இரு தரப்பையுமே கொன்றுவிடும். எனவே, உண்மையைச் சொல்லிவிட்டு, இருக்கும் காலத்தில் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ வழிகாண வேண்டும். இதுதான் இந்த குடும்பத்துக்கும் நடந்தது என்கிறார் மருத்துவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com