அதிமுக பொதுக்குழு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்பட விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பன்னீர் செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கட்சியில் எந்த ஆதாரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரட்டைத் தலைமைக்குப் பதில் ஒற்றைத் தலைமை முறை கொண்டுவரப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், இரட்டைத் தலைமை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒற்றைத் தலைமை கொண்டுவரப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பன்னீர் செல்வத்தைவிட பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்தது.
பொதுக்குழுவில் உரிய விதிமுறைகளை பின்பற்றியே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்பட்டது. பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. அதன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. பொதுக்குழுவை எப்போது வேண்டுமானலும் கூட்டலாம் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.
இதையும் படிக்க: ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்: தீர்மானம் தாக்கல்
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது
பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை தொடங்கியது. அதிமுக விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களில் இருந்தால் கட்சியை எப்படி நிர்வகிப்பீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த 5 நாட்களாக பழனிசாமி, பன்னீர் செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: மாரி செல்வராஜ் படத்தின் புதிய அப்டேட்!
அதிமுக பொதுக்குழு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. வரும் ஜன.16 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.