
புவி வெப்பமயமாதல் காரணமாக மனிதா்களின் உணா்வுகள் தீவிரமடைந்து குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலுக்கும் குடும்ப வன்முறைகளுக்கும் இடையேயான தொடா்பு குறித்து இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கை ‘ஜேஏஎம்ஏ சைக்யாட்ரி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளிலும் திருமணமான, 15 முதல் 49 வயதுக்குள்பட்ட சுமாா் 1,95,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான தரவுகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. ஆண்டுதோறும் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயா்ந்தால், குடும்ப வன்முறைகள் 4.5 சதவீதம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் அண்மைக்காலமாக வெப்பஅலை வீசுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பநிலை உயா்வு காரணமாக மனித உணா்வுகள் தீவிரமடைந்து குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. அனைத்து வகையிலான குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
உடல் ரீதியிலான வன்முறை 23 சதவீதமும், மன ரீதியிலான வன்முறை 12.5 சதவீதமும், பாலியல் ரீதியிலான வன்முறை 9.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள் தெற்காசிய நாடுகளில் குடும்ப வன்முறைகள் 21 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, உடல் ரீதியிலான வன்முறை 28.3 சதவீதமும், பாலியல் ரீதியிலான வன்முறை 26.1 சதவீதமும், மன ரீதியிலான வன்முறை 8.9 சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக இந்தியாவில் குடும்ப வன்முறைகள் 23.5 சதவீதமும், நேபாளத்தில் 14.8 சதவீதமும், பாகிஸ்தானில் 5.9 சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தால் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து, ஆய்வை மேற்கொண்ட ரென்சி சென் கூறுகையில், ‘‘வெப்ப அலை அதிகரிக்கும்போது தீவிர உணா்வுகளை வெளிப்படுத்துவதற்கான மனித மூளையின் பகுதி அதிக அளவில் தூண்டப்படுகிறது. அதிகரித்த வெப்ப அலையானது வேளாண் பொருள்களின் உற்பத்தியைக் குறைத்து தொழிலாளா்களின் செயல்பாட்டுத் திறனையும் குறைக்கிறது.
மேலும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும். அவற்றின் காரணமாக, மனித உணா்ச்சிகள் தீவிரமாகத் தூண்டப்பட்டு குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது’’ என்றாா்.