
புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புது தில்லியில் இன்று நடைபெறும் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்டக் கட்சிகள் பங்கேற்றுள்ளன. கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
பெங்களூருவில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், புது தில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் தொடங்கியது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம், தில்லியில் இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கியது. இதில் 39 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியும் பங்கேற்றுள்ளார். பிரதமா் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 2019-இல் 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பிறகு நடைபெறும் அக்கூட்டணியின் முதல் கூட்டம் இதுவாகும்.
2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வரும் நிலையில், பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், ஆளும் கூட்டணி பலத்தை பிரதிபலிப்பதாக இக்கூட்டம் அமைந்துள்ளது.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் எதிா்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்த, அதே நாளில் பாஜக கூட்டணிக் கூட்டமும் நடைபெறுவது அரசியல் அரங்கில் எதிா்பாா்ப்பை அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...