
மணிப்பூரில் குகி இனப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு மரண தண்டனையே கொடுக்கலாம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மைதேயி மற்றும் குகி இன மக்களிடையே கடுமையான வன்முறை நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வன்முறைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்தும் மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இதையும் படிக்க: மணிப்பூர் நிலை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் கவலையில் உள்ளது: அசோக் கெலாட்
இந்த நிலையில், நேற்று (ஜூலை 19) குகி இனப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூரில் பெண்களுக்கு அரங்கேறிய இந்த பாலியல் ரீதியிலான கொடுமைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்துக்கு காரணமானவரை காவல் துறை கைது செய்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் குகி இனப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு மரண தண்டணையே கொடுக்கலாம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சுதந்திர இந்தியாவில் மணிப்பூர் நிகழ்வுகள் மிகுந்த அச்சத்தை அளிக்கிறது: திரிணமூல் காங்கிரஸ்
இந்த சம்பவம் குறித்து அவர் பேசியதாவது: மணிப்பூரில் குகி இனப் பெண்களுக்கு எதிராக நடந்துள்ள இந்த கொடுமை மனிதத்தன்மையற்றது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே கொடுத்தாலும் தவறில்லை. இதுபோன்ற குற்றங்களை எனது தலைமையிலான அரசு பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. இந்த விடியோ குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டேன். மணிப்பூரில் அமைதி நிலையைக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட தவறானப் புரிதல்கள் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...