மணிப்பூர் கொடூரம்: மாநிலங்களவையும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
மணிப்பூர் கொடூரம்: மாநிலங்களவையும் ஒத்திவைப்பு


புது தில்லி: மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரண்டாவது நாளாக இன்றும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

விவாதத்துக்கு தயாரென மத்திய அரசு உறுதியளித்தபோதிலும், பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்பதில் எதிா்க்கட்சிகள் தீா்மானமாக உள்ளன. மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கையில் பதாகைகள் ஏந்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையும் இதே நிலை நீடித்தது. இதனால், மாநிலங்களவையும் நாள் முழுமைக்குத் ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூா் கலவரத்தில், பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்த விடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

‘மணிப்பூா் நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வலுவாக முன்வைத்தன.

‘மணிப்பூா் பற்றி எரிகிறது’ என்ற முழக்கத்துடன், எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நேற்றும் அவை நடவடிக்கைகள் இன்றி, நாள்முழுக்க முடங்கின.


நேற்று அவை அவை கூடியபோது, மணிப்பூா் நிலவரம் குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். ‘அவைக்கு பிரதமா் வந்து விளக்கமளிக்க வேண்டும்’ என்று அவா்கள் வலியுறுத்தினா்.

அமளிக்கு இடையே பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘மணிப்பூா் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாா் என மத்திய அரசு ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது. மக்களவை பாஜக குழு துணைத் தலைவா் ராஜ்நாத் சிங்கும் இதே உறுதிமொழியை அளித்துள்ளாா். விவாதத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விரிவாக பதிலளிப்பாா்’ என்றாா்.

இதனைக் கண்டித்து, இரண்டு நாள்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியினா் அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்தப் பிரச்னையில், இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

‘ஆளும் பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே, மணிப்பூா் பற்றி எரிய காரணம்’ என்பது எதிா்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com