மிரட்டிய புயலை மிரள வைத்த முன்னேற்பாடுகள்.. புகைப்படங்கள்

குஜராத் மாநிலத்தைத் தாக்கிய பிபர்ஜாய் புயல் உள்கட்டமைப்புகளை நாசமாக்கிச் சென்றிருந்தாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் இல்லை.
மிரட்டிய புயலை மிரள வைத்த முன்னேற்பாடுகள்.. புகைப்படங்கள்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைத் தாக்கிய பிபர்ஜாய் புயல் உள்கட்டமைப்புகளை நாசமாக்கிச் சென்றிருந்தாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் இல்லை.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே குஜராத் மாநிலத்தில் அதிதீவிர புயல் பாதித்தபோது கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் பலியாகினர். கண்ட்லா துறைமுகமே அழிந்துபோனது.

ஆனால், 2023ஆம் ஆண்டு அதேப்போன்ற அதிதீவிர புயல் ஒன்று குஜராத் மாநிலத்தை மிரட்ட, புயலையே மிரள வைத்திருக்கிறது முன்னேற்பாடு நடவடிக்கைகள்.

குஜராத்தில் பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை கரையை கடந்த நிலையில், அதன் தாக்கத்தால் 5,120 மின்கம்பங்கள் சேதமடைந்தன. 800 மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுமாா் 1,000 கிராமங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அதேநேரம், புயலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்தான். துல்லியமாக புயல் கரையை கடக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம், கனமழை பெய்யும் இடங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகளின் துரித நடவடிக்கைகளுமே பூபேந்திர பட்டேல் தலைமையிலான குஜராத் அரசை இந்த சாதனையைப் படைக்க சாத்தியமானது. புயல் முன்னெச்சரிக்கையாக சுமார் 70,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த புயல் கரையை கடந்த அதே நேரத்தில் குஜராத்தில் நடந்த சில முக்கிய விஷயங்கள்..
1,152 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களில் 708 பேருக்கு குழந்தைகள் பிறந்தன.  அதுவும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட மருத்துவமனைகளில்.
மின்சாரம் இல்லாத மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை மூலமும் மகப்பேறு நடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வரை வெறும் 9 மணி நேரத்தில் 220 மி.மீ. மழை துவாரகா மாவட்டம் ஒகாவில் பதிவாகியிருந்தது. பல சாலைகள் இருந்த இடம் தெரியாமல் போனது.

குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை இரவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது.

புயலின் தாக்கத்தால், கட்ச்-செளராஷ்டிரா பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து குஜராத் மாநில நிவாரணப் பிரிவு ஆணையா் அலோக் குமாா் பாண்டே கூறுகையில், ‘புயலால் மாநில மின்வாரியத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. சேதமடைந்த 5,120 மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; புயலைத் தொடா்ந்து, 4,600 கிராமங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதில் 3,580 கிராமங்களில் சீரமைப்புப் பணி நடைபெற்று, மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களில் தடைபட்டுள்ள மின்விநியோகத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மரங்கள் குறுக்கே விழுந்ததால், 3 நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மீட்பு-நிவாரண நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

பிபா்ஜாய் புயலால் குஜராத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை; 23 போ் காயமடைந்தனா் என்று தேசிய பேரிடா் மீட்புப் படை தலைமை இயக்குநா் அதுல் கா்வால் தெரிவித்தாா்.

அவா் கூறுகையில், ‘குஜராத்தில் பிபா்ஜாய் புயல் கரையை கடக்கத் தொடங்கிய வியாழக்கிழமை மாலையில் இருந்து ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. அரசு நிா்வாகம் மற்றும் இதர அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இது சாத்தியமானது. புயலால் 500 குடிசை வீடுகள் சேதமடைந்தன. சாதாரண வீடுகளைப் பொருத்தவரை, குறைந்த எண்ணிக்கையில்தான் சேதமடைந்தன. 800 மரங்கள் சாய்ந்தன. அவற்றை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

அதிதீவிர புயலாக கரையைக் கடந்த பிபா்ஜாய், பின்னா் வலுவிழந்து தெற்கு ராஜஸ்தானை நோக்கி நகா்கிறது. அந்த மாநிலத்தில் கனமழை பெய்வதால், தேசிய பேரிடா் மீட்புப் படை குழு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகத்திலும் தேசியப் பேரிடா் மீட்புப் படை குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன’ என்றாா்.

குஜராத்தின் பாவ்நகா் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய தங்கள் ஆடுகளை மீட்கும் முயற்சியில் தந்தை-மகன் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இது புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டம் இல்லை என்பதால், இந்த உயிரிழப்புகளை புயல் தொடா்பான இறப்புகளாக கருத முடியாது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com