
ப.சிதம்பரம்
கடந்த 2016ல் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மிக முட்டாள்தனமான நடவடிக்கை என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தனது ட்விட்டர் பதிவில், '2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையோ, படிவங்களோ சான்றுகளோ தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன.
இதையும் படிக்க | ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான்: சக்திகாந்த தாஸ்
கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பாஜகவின் சுழல் முறியடிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்களிடம் ரூ.2,000 நோட்டுகள் இல்லை. 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள் அதை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டனர். தினசரி சில்லறை பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை.
அப்படியென்றால், ரூ.2,000 நோட்டுகளை வைத்துக்கொண்டு பயன்படுத்தியது யார்? பதில் உங்களுக்கு தெரியும்.
2,000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை எளிதில் பதுக்கி வைக்கவே இது உதவியது. 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு இப்போது சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோள் இவ்வளவுதான். 2016 ஆம் ஆண்டு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை. குறைந்தது 7 ஆண்டுகளுக்குப் பிறகாவது உப்பிடிக்க முட்டாள்தனமான நடவடிக்கை திரும்பப்பெறப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரூ.2,000 நோட்டு மாற்ற வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள்