
காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி எப்போதும் ஏழை மக்களுடன் அவர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது. இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றித் தந்தவர் ஜவஹர்லால் நேரு. ஆனால், அதை வைத்துக்கொண்டு பாஜக என்ன செய்கிறது? நீங்கள் (பாஜக) காங்கிரஸிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்தது எல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டுமே. ஆனால், பாஜக செய்துகொண்டிருப்பது எல்லாம் அதானி போன்றவர்களுக்காக மட்டுமே எனக் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாவிட்டாலும் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் தலைமையில் பாஜக தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கமல்நாத் நிறுத்தப்பட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...