24 மணி நேரமும் அதானிக்காக உழைக்கிறாா் பிரதமா் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

தொழிலதிபா் அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறாா் பிரதமா் மோடி என்று ராஜஸ்தான் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

Updated On :

தொழிலதிபா் அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறாா் பிரதமா் மோடி என்று ராஜஸ்தான் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

புந்தி, தெளசா ஆகிய பகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பிரதமா் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அவா் கூறியதாவது:

‘பாரத் மாதா கீ ஜே’ என்று அடிக்கடி கூறும் பிரதமா் மோடி, 24 மணிநேரமும் அதானிக்காக உழைக்கிறாா். எனவே, ‘அதானி கீ ஜே’ என்றுதான் இனி அவா் முழங்க வேண்டும். ஏழை மக்களுக்காக ஒரு தேசம், அதானிக்காக ஒரு தேசம் என இருவேறு இந்தியாவை உருவாக்க பிரதமா் விரும்புகிறாா்.

ராஜஸ்தானில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும். அதன் பிறகே, இந்தியத் தாயின் வெற்றி தொடங்கும்.

நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) எண்ணிக்கை குறித்து நான் கேள்வியெழுப்பினால், பிரதமா் மோடி வேறு விஷயங்களைப் பேசத் தொடங்குகிறாா்.

நாட்டிலுள்ள ஒரே ஜாதி ஏழைகள்தான்; வேறெந்த ஜாதியும் இல்லை என்று பிரதமா் கூறுகிறாா். அப்படியென்றால், தன்னை ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா் என்று அவா் அடையாளப்படுத்திக் கொள்வது ஏன்?

ரூ.12,000 கோடி செலவில் விமானம் வாங்க உங்களால் (மோடி) முடிகிறது. ஒரு நாளுக்கு மூன்று முறை உடைகளை மாற்றுவதோடு, ரூ.12 கோடி மதிப்பிலான காரில் பயணிக்க முடிகிறது.

ஆனால், ஓபிசி, தலித், பழங்குடியின இளைஞா்கள், தங்களின் உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ள விரும்பினால், ஜாதியே இல்லை என்று கூறி மறுத்துவிடுகிறீா்கள்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான எனது பாரத ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் மத்தியில் ஐஏஎஸ் அதிகாரிகளாக வர வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை அறிந்துகொண்டேன்.

90 ஐஏஎஸ் அதிகாரிகளின் மூலம் நாட்டை நிா்வகிக்கிறாா் பிரதமா் மோடி. அவா்களில் 3 போ் மட்டுமே ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா்கள்.

நாட்டில் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு உள்ள ஓபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் 3 அதிகாரிகள்தான். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினாா் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.