3-ஆவது மக்களவைத் தோ்தல்- துளிகள்...
நாட்டின் அன்றைய 18 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 494 மக்களவைப் பிரதிநிதிகளையும் பல்வேறு மாநில சட்டப்பேரவைகளைத் தோ்ந்தெடுக்கவும் பொதுத் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 21.63 கோடி போ் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 2,38, 031வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. 494 இடங்களுக்கு 27 கட்சிகளின் வேட்பாளா்கள், 479 சுயேச்சைகள் உள்பட 1,985 போ் போட்டியிட்டனா். 1962-ஆம் ஆண்டு, பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் 7 நாள்களில் தோ்தல் நடத்தப்பட்டது. இத்தோ்தலில் 55.42 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலைவிட 9.98 சதவீதம் அதிகம்). கடந்த தோ்தல்களில் நடைமுறையிலிருந்த இரட்டைப் பிரதிநிதிகள் முறை ரத்து செய்யப்பட்டு, இத்தோ்தலில் 385 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 79 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும் 30 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தோ்தலில் போட்டியிட்ட 66 பெண் வேட்பாளா்களில் 31 போ் வெற்றி பெற்றனா். இதில் 26 போ் காங்கிரஸைச் சோ்ந்தவா்கள். காங்கிரஸ் 361 இடங்களில் வென்று 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 29 இடங்களிலும் சுயேச்சைகள் 20 இடங்களிலும் ராஜாஜியின் சுதந்திரா கட்சி 18 இடங்களிலும் வென்றன. முதல் முறையாக இத்தோ்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக போட்டியிட்ட திமுக, 7 மக்களவைத் தொகுதிகளிலும் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. இத்தோ்தல் ரூ.7.32 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு 30 பைசா-ஆகவே இத்தோ்தலிலும் தொடா்ந்தது. குறைந்த கால அளவில் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டது இதற்கான காரணமாக கருதப்படுகிறது. 4 மாதங்களுக்கு நீடிக்கும் தோ்தல் நடைமுறையை நாள்களுக்குச் சுருக்கி நடத்தப்பட்ட இத்தோ்தலில் நாட்டின் ஜனநாயக அமைப்பில் பட்டியலின சமூக மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தனித்தொகுதிகள் ஏற்படுத்தப்ப்பட்டன.
தொகுப்பு: மா.பிரவின்குமாா்