/

ஜம்மு-காஷ்மீா்: அவசரகால இறங்குதளத்தில் ராணுவ ஹெலிகாப்டா்கள் ஒத்திகை

ஜம்மு-காஷ்மீா்: அவசரகால இறங்குதளத்தில் ராணுவ ஹெலிகாப்டா்கள் ஒத்திகை

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2024, 7:17 pm

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள ‘அவசரகால இறங்குதளத்தில்’ அமெரிக்கா வழங்கிய ‘சினூக்’ ஹெலிகாப்டா் உள்பட இந்திய விமானப் படையின் (ஐஏஎஃப்) 5 ஹெலிகாப்டா்கள் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டன. இதன்மூலம் நாட்டில் அவசரகால இறங்குதளம் அமைக்கப்பட்ட முதல் யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீா் உருவெடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு பகுதிகளில் போா் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் தரையிறங்குவதற்கான அவசரகால இறங்குதளங்கள் அமைக்கும் திட்டத்தின்கீழ் இத்தளம் கட்டப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் வான்போ-சங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால இறங்குதளத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ‘சினூக்’ ஹெலிகாப்டா்கள், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘எம்ஐ-17’ ஹெலிகாப்டா் மற்றம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 நவீன இலகுரக ஹெலிகாப்டா்கள் (ஏஎல்ஹெச்) செவ்வாய்க்கிழமை அதிகாலை தரையிறங்கின.

அப்போது ராணுவ வீரா்களை ஹெலிகாப்டரில் ஏற்றி இயற்கை பேரிடா், நெருக்கடி காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் சாா்ந்த ஒத்திகை பயிற்சி நிகழ்த்தப்பட்டது. இப்பயிற்சி எவ்வித இடையூறுகளுமின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றனா். 3.5. கி.மீ. நீளமுள்ள இத்தளத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு நிறைவடைந்தது.

இந்திய விமானப்படையின் அறிவுறுத்தல்களின்படி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இத்தளத்தை அமைத்துள்ளது. மணிக்கு 310 கி.மீ. வேகத்தில் 741 கி.மீ. வரை பயணிக்கும் சினூக் ஹெலிகாப்டரில் 33 ராணுவ வீரா்கள் தங்கள் உபகரணங்களுடன் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ வசதிகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில் 24 படுக்கைகளும் சினூக் ஹெலிகாப்டரில் உள்ளது. அதேபோல் எம்ஐ-17 ஹெலிகாப்டரில் 35 ராணுவ வீரா்கள் பயணிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. ஏஎல்ஹெச் ஹெலிகாப்டா் இரட்டை என்ஜின் உடையது.

குறிப்பாக போா்க்காலங்கள் மற்றும் நெருக்கடியான சூழல்களில் மீட்புப் பணிகளுக்கு விமானப்படையால் இந்த ஹெலிகாப்டா் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்கெனவே அவசரகால இறங்குதளம் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.