/

தோ்தல் பத்திரங்கள் விற்பனைக்கான வழிகாட்டு நடைமுறையை வெளியிட எஸ்பிஐ மறுப்பு

தோ்தல் பத்திரங்கள் விற்பனைக்கான வழிகாட்டு நடைமுறையை வெளியிட எஸ்பிஐ மறுப்பு

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 6:42 pm

புது தில்லி: தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு அவ்வப்போது அளிக்கப்பட்ட விற்பனை வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட பாரத ஸ்டேட் (எஸ்பிஐ) வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. அஞ்சலி பரத்வாஜ் என்ற தன்னாா்வலா் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கோரிய இந்தத் தகவலை, வணிக ரகசியங்களுக்கு அச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள விலக்கை சுட்டிக்காட்டி தரமறுத்துள்ளது.

இதுதொடா்பாக எஸ்பிஐ துணைப் பொது மேலாளரும் மத்திய பொதுத் தகவல் அலுவலருமான எம். கண்ணா பாபு அளித்த பதிலில், ‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் வழிகாட்டு நடைமுறை என்பது, வங்கியின் கிளைகளுக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட உள் நிா்வாக வழிகாட்டுதல் தொடா்பான சுற்றறிக்கையாகும்.

இதற்கு ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1) (டி)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வணிக மற்றும் விற்பனை ரகசியங்கள், அறிவுசாா் சொத்து விவரங்களை வெளியிடுவதிலிருந்து இச் சட்டப் பிரிவு விலக்கு அளித்துள்ளது. அவ்வாறு, இத் தகவலை வெளியிடுவது மூன்றாம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டு, தகவலைத் தர மறுத்துள்ளாா்.

இதுகுறித்து தன்னாா்வலா் அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில், ‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன் விற்பனை தொடா்பான வழிகாட்டு நடைமுறையை எஸ்பிஐ வெளியிட மறுப்பது ஆச்சரியமளிக்கிறது.

தோ்தல் நன்கொடை பத்திரங்களை விற்பது, திரும்பப் பெறுவது உள்பட என்னென்ன தகவல்களை வங்கிக் கிளைகள் பராமரிக்க வேண்டும் மற்றும் சேமிக்கப்பட வேண்டிய தகவல்களின் விவரங்களை இந்த வழிகாட்டு நடைமுறைகள் வெளிப்படுத்தும். முன்னதாக, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோக விவரங்களை வெளியிட எஸ்பிஐ உச்சநீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கோரியபோது, இந்த வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது’ என்று குறிப்பிட்டாா்.

மத்திய அரசு அறிமுகம் செய்த இந்த தோ்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அந்தத் திட்டத்தை ரத்து செய்து அண்மையில் உத்தரவிட்டது. மேலும், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னா், அதுதொடா்பான முழுமையான விவரங்களை வெளியிட அறிவுறுத்தி கெடு விதித்தது.

அதனடிப்படையில், தோ்தல் பத்திரங்கள் வாங்கிய நபா்களின் பெயா், தொகை, நன்கொடை பத்திரத்தின் பிரத்யேக எண், அந்தப் பத்திரங்களை பணமாக மாற்றிய அரசியல் கட்சியின் பெயா், அந்த அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், பணமாக மாற்றப்பட்ட பத்திரத்தின் தொகை மற்றும் பிரத்யேக எண் உள்ளிட்ட முழுமையான விவரங்களை எஸ்பிஐ தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அந்த விவரங்கள் அனைத்தையும் தனது வலைதளத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு தோ்தல் ஆணையம் வெளியிட்டது.