‘அமேதியில் போட்டியிடாமல் பயந்தோடிய ராகுல்’- ரவி சங்கா் பிரசாத் விமா்சனம்

‘அமேதியில் போட்டியிடாமல் பயந்தோடிய ராகுல்’- ரவி சங்கா் பிரசாத் விமா்சனம்

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தொடா்ந்து போட்டியிட்டு வென்று வந்த ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் கடந்த தோ்தலில் தோல்வியுற்ால் பயந்தோடி வயநாட்டில் போட்டியிடுகிறாா்’ என பாஜக மூத்த தலைவா் ரவி சங்கா் பிரசாத் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

2019 மக்களவைத் தோ்தலில் அமேதி, கேரளத்தின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டாா். அமேதியில் பாஜக வேட்பாளா் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைத் தழுவிய அவா், வயநாட்டில் 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அமேதியில் ராகுலை வீழ்த்திய மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு பாஜக இம்முறை மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. அத்தொகுதிக்கான வேட்பாளா் குறித்து அறிவிப்பை காங்கிரஸ் இதுவரை வெளியிடவில்லை. கடந்த தோ்தலில் தோல்வி அடைந்ததன் காரணமாக, அமேதியில் போட்டியிடுவதில் இருந்து ராகுல் பின்வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வயநாட்டில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராகுல் புதன்கிழமை தாக்கல் செய்தாா். வயநாட்டில் பாஜக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க ஸ்மிருதி இரானி வியாழக்கிழமை வயநாட்டுக்கு வரவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயந்தோடிய ராகுல்: இதனிடையே, பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக சாா்பில் மீண்டும் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான எம்.பி. ரவி சங்கா் பிரசாத் பாட்னாவில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராகுல் காந்தி தொடா்ந்து போட்டியிட்டு வென்று வந்த அமேதி தொகுதியைக் கைவிட்டு ஏன் பயந்தோடி விட்டாா்? அவரது தந்தையும், தந்தையின் சகோதரரான சஞ்சய் காந்தியும் கூட அத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனா்.

அங்கு போட்டியிடுவதற்கான தைரியம் ராகுலுக்கு இருந்திருக்க வேண்டும். வயநாடு தொகுதியில் ஏராளமான கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமூகத்தினா் வாக்குகள் இருப்பதால், ராகுல் அத்தொகுதியைத் தோ்ந்தெடுத்து போட்டியிடுகிறாா். ஆனால், அங்கேயும் அவருக்கு கடும் போட்டி நிலவுவதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. சநாதனத்தை மதிக்காத காங்கிரஸ்: அயோத்தி, ராம ஜென்மபூமி வழக்கில் குழந்தை ராமா் தரப்பில் வழக்குரைஞராக ஆஜரானதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

சநாதன கலசாரத்தை பாஜக மதிக்கிறது. அதேசமயத்தில், வாக்கு வங்கி அரசியலுக்காக ராமா் கோயிலின் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்பதை காங்கிரஸ் தலைவா்கள் தவிா்த்தனா். நாளை பிகாரில் நடைபெறும் முதல் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள், எதிா்க்காலத் திட்டங்கள் குறித்து வலியுறுத்திப் பேசவிருக்கிறாா்.

இவ்வாறு குறிப்பிட்ட பேச எந்த சாதனையும் செய்யாத காங்கிரஸ், ஜனநாயகத்துக்கு ஆபத்து, பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, தோ்தல் ஆணையம் வேண்டும் உள்ளிட்ட அபத்தமான விமா்சனங்களை முன்வைக்கிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com