ரூ.2,000 கோடி நிவாரணம் கோரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

ரூ.2,000 கோடி நிவாரணம் கோரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
Updated on
2 min read

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மனு தாக்கல் செய்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் தயாரித்து, வழக்குரைஞர் டி.குமணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2023, டிசம்பரில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி உதவியாக தமிழக அரசுக்கு ரூ. 19,692.69 கோடியை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறையின் அமைச்சகங்கள் இடையிலான மத்தியக் குழுவிடம் (ஐஎம்சிடி) 14.12.2023-இல் அளிக்கப்பட்ட தமிழக அரசின் மனுவை இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் பரிசீலித்து வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

2023, டிசம்பர் 17 முதல் 18 வரையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மிகக் கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட சேதங்களுக்கு நிதியுதவியாக தமிழக அரசுக்கு ரூ.18,214.52 கோடியை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்துக்கு 26.12.2023-இல் மனுதாரர் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதைப் பரிசீலிக்குமாறும், இந்த நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை, நிதி அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

புயல் பாதித்த மாவட்டங்களுக்கும், வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கும் மத்தியக் குழு நேரில் வந்து மாநிலத்தின் நிலைமையைப் பற்றிய விரிவான மதிப்பீட்டைச் செய்தது.

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, பிரிவு 9-இன் கீழ் அமைக்கப்பட்ட தேசிய செயற்குழுவின் துணைக் குழுவின் மேற்படி அறிக்கையின் பரிசீலனையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாணை சமர்ப்பித்த நாளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்த பின்னரும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்துக்கான உதவி குறித்த இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. மத்திய அரசின் இந்தச் செயலானது இந்திய அரசமைப்பின் 14 மற்றும் பிரிவு 21-இன் கீழ் குடிமக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், சட்டத்துக்குப் புறம்பானதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது.

பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் போன்ற இரட்டைப் பேரிடர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்காக மத்திய அரசு எந்த நிதியையும் தமிழகத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கான உயர்நிலைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு உள்துறை அமைச்சகம் அதிக காலதாமதம் செய்தது. அதன் விளைவாக மத்திய நிதியமைச்சகம் தமிழக அரசுக்கு நிதியை விடுவிப்பதற்கும் மாநில வளர்ச்சிக்கும் இடையூறாக உள்ளது.

இதனால், கடுமையான இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு, தமிழக அரசிடமிருந்து நிவாரண நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் மாநில மக்களுக்கு மன வேதனையும், கஷ்டங்களும் ஏற்படுகின்றன. ஆகவே, நிதி உதவி கோரி மத்தியக் குழுவிடமும், மத்திய நிதியமைச்சகத்திடமும் மனுதாரர் அளித்த மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, நிவாரணப் பணிகள் மற்றும் தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இடைக்கால உதவி கோரி தமிழக முதல்வர் 19.12.2023-இல் அளித்த மனு மற்றும் 10.01.2024-இல் தலைமைச் செயலர் அளித்த கோரிக்கைகளை பரிசீலித்து இடைக்கால நிவாரண நடவடிக்கையாக தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி வழங்க மத்திய உள்துறை, நிதி அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com