சண்டீகர் மேயர் தேர்தல்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தேர்தல் அதிகாரி

சண்டீகர் மேயர் தேர்தல்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தேர்தல் அதிகாரி

சண்டீகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி 12 வாக்குகள் பெற்றதாகவும், பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

இதில் தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் ஒப்புக்கொண்டார்.

அடையாளத்துக்காக 8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சண்டீகர் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனில் மாசிஹ் மீது கிரிமினல் நடவடிக்கை தொடரவும் உத்தரவிட்டது.

இதனிடையே, மேயராக அறிவிக்கப்பட்டிருந்த பாஜகவைச் சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் உச்சநீதிமன்றத்தில் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

அனில் மாசிஹ் மன்னிப்பு குறித்து பதில் எதுவும் தெரிவிக்காத தலைமை நீதிபதி அமர்வு, அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com