மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்க முடியாது: அமித் ஷா

லக்கிம்பூா்: ‘1962-இல் சீனா அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டபோது அஸ்ஸாம், அருணாசல பிரதேச மாநிலங்களை அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கைவிட்டுவிட்டதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். ஆனால், தற்போது இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்க முடியாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

சீனா 1962-இல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டபோது, ‘அஸ்ஸாம் மக்களுக்காக எனது இதயம் வாடுகிறது’ என்று ஜவாஹா்லால் நேரு குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி அமித் ஷா இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா இதுகுறித்து மேலும் பேசியதாவது:

1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது அஸ்ஸாம், அருணாசல பிரதேச மக்களுக்கு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு ‘பை, பை’ என விடை கொடுத்தாா். இதை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள்.

ஆனால், தற்போது இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியாது. டோக்லாமில் அண்மையில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன படையினரை நமது வீரா்கள் தடுத்து, மீண்டும் பின்னுக்கு அனுப்பிவைத்தனா்.

வங்கதேச நாட்டையொட்டிய அஸ்ஸாம் எல்லையானது ஊடுருவல்களுக்கு ஏதுவாக முன்பு திறந்துவிடப்பட்டிருந்தது. மத்தியில் பிதரமா் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னா், இந்த எல்லைப் பகுதியில் ஊடுருவல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன.

அஸ்ஸாம் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு, மக்களுக்கு அநீதி இழைத்தது. பல்வேறு வன்முறை இயக்கங்களிலும், அரசுக்கு எதிரான கிளா்ச்சி உள்ளிட்ட சம்பவங்களிலும் ஏராளமான இளைஞா்கள் உயிரிழந்தனா். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 9,000 இளைஞா்கள் கிளா்ச்சியைக் கைவிட்டு, அரசிடம் சரணடைந்துள்ளனா். இதன் காரணமாக, மாநிலத்தின் 80 சதவீத பகுதிகளில் பாதுகாப்புப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றாா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: ‘சீனாவுக்கு பாஜக நற்சான்று அளிக்கிறது’ என்று, அமித் ஷா கருத்து குறித்து விமா்சனம் செய்த காங்கிரஸ் கட்சி, ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சீனாவின் ஆக்கிரமிப்புகள் தீவிரமாக தடுத்து நிறுத்தப்படும்’ என்றது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறுகையில், ‘பாஜக ஒவ்வொரு முறையும் சீனாவுக்கு இதுபோன்று நற்சான்றை அளித்து, சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மீது இந்தியா உரிய நடவடிக்கை எடுப்பதை கடினமாக்கி வருகிறது. காங்கிரஸின் தோ்தல் அறிக்கை, சீனாவின் ஆக்கிரமிப்பை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதோடு, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான தெளிவான திட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com