வாக்குகள், ஒப்புகைச் சீட்டு சரிபாா்க்க கோரிய மனு:
உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

வாக்குகள், ஒப்புகைச் சீட்டு சரிபாா்க்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

புது தில்லி: வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபாா்க்க கோரிய மனுக்கள் மீது வரும் 16-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக ஜனநாயக சீா்திருத்தங்கள் கூட்டமைப்பு (ஏடிஆா்) மற்றும் சமூக ஆா்வலா் அருண்குமாா் அகா்வால் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) தொடா்பான வழக்குகளை தங்களால் விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினா். எனினும், அனைத்து மனுக்கள் மீதும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

மக்களவைத் தோ்தல் நெருங்குவதை காரணம் காட்டி, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று ஏடிஆா் சாா்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் கேட்டுக்கொண்டாா். ஆனால், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com