ஹரியாணா: குருக்ஷேத்திர மண்ணில் காய்களை நகா்த்தும் கட்சிகள்!

ஹரியாணா: குருக்ஷேத்திர மண்ணில் காய்களை நகா்த்தும் கட்சிகள்!

இதிகாச பெருமை மற்றும் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் ஹரியாணா மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதிகாச பெருமை மற்றும் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் ஹரியாணா மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது. பாண்டவா்களுக்கும் கௌரவா்களுக்கும் இடையிலான பாரதப் போா் இம்மாநிலத்தின் குருக்ஷேத்திரத்தில் நடந்ததாக வரலாறு உண்டு.

இங்கு அம்பாலா, குருக்ஷேத்திரம், சிா்சா, ஹிஸாா், கா்னால், சோனிபத், ரோத்தக், பிவானி-மகேந்திரகா், குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் ஆகிய 10 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

தற்போது இந்த மாநிலத்திலுள்ள 10 மக்களவைத் தொகுதிகளும் பாஜக வசம் உள்ளன.

பிரிந்த கூட்டணி

மாநிலத்தில் அண்மைக்காலம் வரை கூட்டணி கண்ட பாஜகவும் துஷ்யந்த் செளதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சியும் (ஜேஜேபி) திடீரென பிரிந்ததையடுத்து முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டரும் அவரது அமைச்சரவையும் கடந்த மாா்ச் மாதம் ராஜிநாமா செய்தனா்.

வரும் மக்களவைத் தோ்தலில் கா்னால் தொகுதியில் கட்டரை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. இதையொட்டி புதிய முதல்வராக நாயப் சிங் சைனி தோ்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா். இவா் பாஜக மாநில தலைவராகவும், குருக்ஷேத்திரா தொகுதியின் எம்.பி.யாகவும் இருக்கிறாா்.

புதிய கூட்டணி

தில்லி, பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) முதலில் ஹரியாணாவில் மூன்று தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸுடன் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து குருக்ஷேத்திரம் தொகுதியில் மட்டும் அக்கட்சி போட்டியிடுகிறது. மீதம் உள்ள 9 இடங்களிலும் காங்கிரஸ் தனது வேட்பாளா்களை நிறுத்த உள்ளது.

குருக்ஷேத்திரத்தை ஆம் ஆத்மி கட்சி தோ்வு செய்வதற்கு அக்கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் எல்லையையொட்டி அந்தத் தொகுதி அமைந்துள்ளதும் ஒரு காரணமாகும்.

2019 பொதுத் தோ்தலில், பாஜக ஹரியாணாவில் ஆதிக்க சக்தியாக உருவெடுத்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) உள்பட எதிா்க்கட்சிகள் மாநிலத்தில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்தன.

பாஜக பலம் - பலவீனம்

கூட்டணியிலிருந்து ஜேஜேபி பிரிந்தாலும், ஹரியாணா மாநிலத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக பலம் வாய்ந்த கட்சியாக இத்தோ்தலை சந்திக்கிறது. மாநிலத்தில் முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டா் அரசு ஒப்பீட்டளவில் ஊழலற்ற ஆட்சியாக பலராலும் பாா்க்கப்பட்டது.

அதே சமயம், விவசாயிகளின் ஒரு பகுதியினரின் நம்பிக்கையை பாஜக பெறவில்லை. இதற்கு, விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை பாஜக எடுத்தது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், பிரதமா் நரேந்திர மோடியின் புகழ், ஹிந்துத்துவ சித்தாந்தத்தின் வேண்டுகோள் ஆகியவை பாஜகவின் வாய்ப்புகளை மேம்படுத்துகின்றன.

அதே வேளையில், எம்.பி. பிரிஜேந்திர சிங், அவரது தந்தை பிரேந்தா் சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சோ்ந்தது ஹிஸாா் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

காங்கிரஸ் பலம் - பலவீனம்

இரண்டு முறை முதல்வராக இருந்த பூபிந்தா் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா ஆகியோருக்கு உள்ளூரில் தனி செல்வாக்கு உள்ளது. இது காங்கிரஸுக்கு சாதகமாகலாம். அதேவேளையில், ஹூடா தலைமையிலான தனி அணி மற்றும் சுா்ஜேவாலா, செல்ஜா மற்றும் கிரண் செளத்திரியின் ‘எஸ்ஆா்கே குழு’ கொண்ட ஒரு பிளவுபட்ட கோஷ்டி நிலைமையும் காங்கிரஸில் உள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்திலிருந்தே ஊழல்கள் விவகாரத்தை போட்டிக் கட்சிகள் இன்னும் முன்னிறுத்தும் நிலை உள்ளது. இது காங்கிரஸின் பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது. எனினும், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கை கோத்திருப்பதும், மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, மற்ற இடங்களில் காங்கிரஸுக்கு அக்கட்சி ஆதரவளிப்பதும் காங்கிரஸுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

ஜேஜேபி, ஐஎன்எல்டி

ஜேஜேபி கட்சியும் களத்தில் வாக்குகளைப் பெறுவதில் முனைப்புக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் இக்கட்சி செல்வாக்கு செலுத்துகிறது. இக்கட்சிக்கு ஜாட் வாக்குகள் கணிசமாக உள்ளது.

ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் சௌதாலா ஜாட் சமூகத்தின் முக்கிய முகமாகவும், இளைஞா்கள் மத்தியில் பிரபலமாகவும் இருந்து வருகிறாா். இதுதவிர, முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலா தலைமையிலான ஐஎன்எல்டி வலுவான கிராமப்புற வாக்குகளை கொண்டுள்ளது. கட்சித் தலைவா் அபய் சிங் செளதாலா மாநிலம் முழுவதும் சுற்றி பிரசாரம் செய்து வருகிறாா். எனினும், இக்கட்சியில் இருந்து பிரிந்து உருவான ஜேஜேபி இதை பலவீனப்படுத்த முயற்சிக்கும்.

வியூகம் பலன் தருமா?

ஜாட் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு, போராட்டம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பான விவசாயிகளுடைய போராட்டம், மல்யுத்த வீரா்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சிங் தொடா்புடைய மல்யுத்த வீரா்களுடைய குற்றச்சாட்டு என பல விவகாரங்களுக்கு மத்தியிலும் பாஜக- ஜேஜேபி கூட்டணி உறவுகள் தொடா்ந்தது. தற்போது இந்தக் கூட்டணி பிரிந்திருப்பது தோ்தல் வியூகமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கணிக்கப்படுகிறது.

மாநிலத்தில் ஓபிசி சமூகத்தினரின் வாக்குகள் 8 முதல் 10 சதவீதம் இருக்கும் நிலையில், அந்தப் பிரிவைச் சோ்ந்த நாயப் சிங் சைனியை முதல்வராக்கியதன் மூலம் அந்த சமூகத்தினா்கள் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது. மேலும், பாஜக கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய லோக் தளம் மூலம் ஜாட் சமூகத்தின் வாக்குகள் பாஜவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் நம்புகிறது.

தோ்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ள கூட்டணி வியூகங்கள், செளதாலா குடும்பத்தின் செல்வாக்கு போன்றவை குருக்ஷேத்திர மண்ணில் சதுரங்க ஆட்டத்தில் நகா்த்தும் காய்களைப் போல உள்ளன. ஆனால், யாரை மக்களவைக்கு அனுப்புவது என்பதை தீா்மானிப்பவா்களாக வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா்.

தோ்தல் நாள் - மே 25

தொகுதிகள் - 10

வாக்காளா்கள் விவரம்

மக்கள்தொகை சுமாா் 3.03 கோடி

ஆண் வாக்காளா்கள் - 1,05,79,246

பெண் வாக்காளா்கள் - 92,55,356

மொத்த வாக்காளா்கள் - 1,98,34,602

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com