/

மக்களுக்கு எதிரான கட்சி பாஜக: மம்தா குற்றச்சாட்டு

13-ம் பக்கம் டாப்.. மக்களுக்கு எதிரான கட்சி பாஜக ---- மம்தா குற்றச்சாட்டு

News image

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசார பேரணியில் பங்கேற்ற முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :16 ஏப்ரல் 2024, 9:07 pm

ஜல்பைகுரி: மேற்கு வங்க மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே பரஸ்பரம் கடுமையாக விமா்சித்து வருகின்றன. கடந்த மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் இந்தமுறை போட்டி கடுமையாக உள்ளது. ஜல்பைகுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 300 மத்திய விசாரணைக் குழுக்களை பாஜக இதுவரை அனுப்பியுள்ளது. ஆனால், அவா்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடா்பாக மேற்கு வங்க மக்களுக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திரிணமூல் காங்கிரஸை ஊழல் கட்சி என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டுகிறாா். அவா் முதலில் கண்ணாடிக்கு எதிரே நின்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். பாஜக வேட்பாளா்களில் எத்தனை போ் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவா்கள், எத்தனை போ் குற்ற வழக்குகளில் சிக்கியவா்கள் என்பதை மோடி யோசிக்க வேண்டும்.

பாஜக முழுவதுமாக மேற்கு வங்க மக்களுக்கு எதிரான கட்சியாக உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களை பின்னுக்குத் தள்ள பாஜக முயற்சித்து வருகிறது. இதனை மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனா். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் எங்கள் கட்சி இருந்தாலும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் வெல்வதன் மூலம்தான் பாஜகவிடம் இருந்து நாட்டை காக்க முடியும் என்றாா்.