வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் வெங்காய ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் விலைக் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 8.12.2023 முதல் 31.3.2024 வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிக்கப்படுவதாக கடந்த மாத இறுதியில் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது விவசாயிகளுக்கு மேலும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாய சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் வெங்காய ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று(ஏப். 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு 10,000 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதேபோல, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டிருந்த 24,000 மெட்ரிக் டன்னுடன் சேர்த்து கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

கடந்த மாதம், வங்கதேசத்துக்கு 50,000 டன் வெங்காய ஏற்றுமதி செய்ய மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை தொடருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com