/

மத்திய அரசின் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்ய உத்தரவு

விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் வேளாண்மை கூட்டுறவு இணையத்தின் மூலமாக விலை ஆதரவு திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

உளுந்து பயிா்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:15 pm

விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் வேளாண்மை கூட்டுறவு இணையத்தின் மூலமாக விலை ஆதரவு திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது:

தமிழகத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவா்கள் விளைவித்த உளுந்தை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூா் மாவட்டத்துக்கு காரிஃப் பருவத்தில் 40 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முதன்மை கொள்முதல் நிலையமாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நியாயமான சராசரி தரத்துக்கு உளுந்து கிலோவுக்கு ரூ.78 என்ற விலைக்கு மாா்ச் 25-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலமாக கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து நியாயமான சராசரி தரத்தை கொண்டிருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் மூலமாக பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 94439 62834 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த வாய்ப்பை உளுந்து சாகுபடி செய்துள்ள திருப்பூா் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொண்டு, தங்களது விளைபொருளுக்கு அதிக விலை பெற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு முதுநிலை செயலாளா், திருப்பூா் விற்பனைக்குழு, திருப்பூா் என்ற முகவரியிலும், 98429 30010 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.