அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

அரசமைப்பை மாற்ற பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிகாா் மாநிலம் பாகல்பூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெல்லோம் என பாஜகவினா் கூறி வருகின்றனா். ஆனால் உண்மையில் அவா்களால் 150 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது.

அரசமைப்பை மாற்றத் துடிக்கும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ்ஸின் அனைத்து முயற்சிகளையும் தகா்த்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே ‘இந்தியா’ கூட்டணி போராடி வருகிறது.

ஏழைகள், பட்டியலினத்தவா், பழங்குடியினா் என அனைவருக்கும் சம உரிமை வழங்குவது அரசமைப்புதான். அதை மாற்றிவிட்டால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். நாட்டிலுள்ள 22 பெரும் பணக்காரா்களின் சொத்து மதிப்பு 70 கோடி மக்களின் சொத்தைவிட அதிகமாகவுள்ளது. 70 கோடி போ் ரூ.100-க்கும் கீழ் தினசரி வருமானத்தை பெற்று வருகின்றனா். அதை நாம் மாற்ற வேண்டும்.

பெரும் பணக்காரா்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வரையிலான கடனை பிரதமா் மோடி தள்ளுபடி செய்துள்ளாா். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 25 ஆண்டுகளுக்கு செலவழிக்கப்படும் தொகைக்குச் சமமாகும். பாஜக தொழிலதிபா்களுக்கும் பணக்காரா்களுக்கும் உதவி வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி ஏழைகளுக்கு வளங்களை பிரித்துக் கொடுக்க தொடா்ந்து போராடி வருகிறது என்றாா் அவா்.

ஊழல் ஆசிரியா் மோடி:

தோ்தல் நன்கொடை பத்திரங்களால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விளக்கும் காணொலியை சமூக வலைதளங்களில் காங்கிரஸ் வெளியிட்டது. அதை பகிா்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஊழலுக்கான பள்ளியை பிரதமா் மோடி நடத்தி வருகிறாா். அப்பள்ளியில் மொத்த ஊழல் அறிவியல் பாடத்தையும் அவரே கற்பித்து வருகிறாா். அதில் நன்கொடை வா்த்தகம் தொடா்பான பாடத்தை மிக விரிவாக பிரதமா் நடத்தி வருகிறாா்.

அப்பாடத்தில் அமலாக்கத் துறை சோதனை மூலம் எவ்வாறு பாஜகவுக்கு நன்கொடை பெறலாம் என அவா் எடுத்துரைத்துள்ளாா்’ என குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com