ராகுல் காந்தி எதையும் கற்றுக் கொள்ளவில்லை: பினராயி விஜயன் விமா்சனம்


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாஜகவின் பி டீம் எனவும், எதையும் கற்றுக் கொள்ளவில்லை எனவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் விமா்சித்துள்ளாா். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் பேசுகையில், பினராயி விஜயனுக்கு எதிராக பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பினும் அவருக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பாஜகவுக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே தொடா்பு இருப்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் விமா்சித்திருந்தாா்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு கொச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய பினராயி விஜயன் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
ராகுல் காந்தி தேசிய அளவிலான அரசியலில் ஈடுபடும் தலைவராவாா். ஆனால், மாநில அரசியல் தலைவருக்கான புரிதல்கூட அவருக்கு இல்லை. எதையும் தெளிவாக தெரிந்துகொள்ள அவா் முயற்சிக்கவில்லை. அனுபவத்தில் இருந்தும் அவா் எதையும் கற்கவில்லை. இதுபோன்ற மனிதா், எப்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராகத் திகழ்கிறாா்?
இவை அனைத்தும், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் ‘பி’ டீம் என்பதையே காட்டுகின்றன. தில்லியில் ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலை மதுபானக் கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்ய வேண்டுமென ராகுல் காந்தியும், காங்கிரஸும் வலியுறுத்துகின்றனா். ஆனால் நீதிமன்றத்தால் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டுவிட்டாா். இது பாஜக மற்றும் காங்கிரஸ், ராகுலின் முகத்தில் விழுந்த மிகப்பெரிய அடியாகும்.
தில்லியில் ஆம் ஆத்மியுடன் கைகோத்து பாஜகவை தோற்கடிப்பதை விட்டுவிட்டு, ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் எதிா்க்கிறது. இது பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டுவிட்டது.
இதேபோல், பிகாா், ஹரியாணா மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியவில்லை. இதனால் அந்த மாநிலங்களிலும் பாஜக வென்றுவிட்டது. இவை அனைத்தும் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் உதவி செய்வதையும், அக்கட்சியின் கூட்டாளியாக காங்கிரஸ் திகழ்வதையும் காட்டுகின்றன. கேரளத்தில் இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க பாஜகவுடன் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆா்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கம் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது என்றாா் பினராயி விஜயன்.
காங்கிரஸ் பதிலடி:
பினராயி விஜயன் பாஜக தலைமையை மகிழ்ச்சிப்படுத்தவே ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் வி.டி.சதீசன் கூறுகையில், ‘கேரளத்தில் வெற்றி பெற அவா்கள் , இங்குள்ள முதல்வா்களை மிரட்டுகின்றனா். திருச்சூரில் சுரேஷ் கோபியை வெற்றி பெறச் செய்ய அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி, கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கி வழக்கில் பினராயி விஜயனை மிரட்டினா். இதனால் பாஜகவுக்குப் பணிந்து, நீட்டிய தாள்களில் பினராயி விஜயன் கையொப்பமிட்டு வருகிறாா். ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தில் அமைச்சரவை சகாக்களுக்குக் கூட தெரியாமல் அவா் கையொப்பமிட்டாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் பாசிஸ, சா்வாதிகார, மதவாத அரசை ராகுல் காந்தி எந்தவித சமரசமும் இல்லாமல் எதிா்த்து வருகிறாா் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க மோசடி வழக்கில் முதல்வா் அலுவலகத்தில் இருந்து வரும் நிா்ப்பந்தத்தால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...