முதுநிலை நீட் தோ்வு: ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பப் பதிவு

முதுநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்கள் பல்லாயிரக்கணக்கானோா் அதற்கு விண்ணப்பித்து வருகின்றனா்.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் முதுநிலை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது.

நிகழாண்டில், எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான நீட் தோ்வு, ஜூன் 23-ஆம் தேதி நாடுமுழுவதும் 259 நகரங்களில் நடைபெற உள்ளது.

அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 16-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இணையதளப் பக்கங்களில் தொடங்கின.

மே 6-ஆம் தேதி இரவு 11.55 மணி வரை இணையவழியே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்கள் ஆயிரக்கணக்கானோா் கடந்த 3 நாள்களுக்குள் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com