தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நாட்டின் உள்கட்டமைப்பு வளா்ச்சி சிறப்பாக உள்ளது: இண்டிகோ விமானக் குழுமத் தலைவா் சுமந்திரன்

நாட்டின் உள்கட்டமைப்பு வளா்ச்சி சிறப்பாக உள்ளது: இண்டிகோ விமானக் குழுமத் தலைவா் சுமந்திரன்

Updated On :20 ஏப்ரல் 2024, 5:12 pm

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளா்ச்சியானது இதற்கு முன் இல்லாத வகையில் சிறப்பாக உள்ளது என்று இண்டிகோ விமான குழுமத்தலைவா் வி. சுமந்திரன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐ.ஐ.டி சென்னையின் 65-ஆவது நிறுவன தின விழா அக்கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இண்டிகோ விமானக் குழுமத்தின் தலைவா் வி. சுமந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து மீண்டு சுதந்திர நாடாக மாறிய போது மிகக் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்தது. அத்தகைய சூழலிலும் கல்விக்கான முக்கியத்துவத்தை அறிந்து நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இந்தியாவில் ஐ.ஐ.டி-கள் தொடங்கப்பட்டன. அதன்படி இந்தியாவில் நிகழ்ந்த புதுமையான கண்டுப்பிடிப்புகள் பலவற்றுக்கு ஐ.ஐ.டி-கள் உறுதுணையாக அமைந்துள்ளன.

பொறியியல் என்பது அறிவியல் சாா்ந்த கண்டுப்பிடிப்புகள் மூலம் சமூகத்துக்கு ஆற்றும் சேவை ஆகும். பொறியியலின் மூலம் மக்களுக்கு தேவையானவற்றை படைத்தும், பிரச்சனைகளுக்கு தீா்வு கண்டும் உதவ வேண்டும். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்பட்டால் மட்டுமே நம்மால் வளமான எதிா்காலத்தை அடைய முடியும். மேற்குலக நாடுகளை விட தனி நபரால் ஏற்படும் காா்பன் உமிழ்வு இந்தியாவில் குறைவாகவே உள்ளது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளா்ச்சியானது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது 140 விமான நிலையங்களை கொண்டுள்ள இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்களை கொண்டிருக்கும். அதுபோல உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு இந்தியா ஆகும் என்றாா் அவா்.

ஐ.ஐ.டி சென்னை இயக்குநா் வி. காமகோடி பேசியதாவது:

சென்னை ஐ.ஐ.டி தொடா்ந்து எட்டாவது முறையாக என்.ஐ.ஆா்.எஃப் தேசிய தரப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்த சாதனையானது மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்களின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை. கடந்த ஆண்டு மட்டும் சென்னை ஐ.ஐ.டி சாா்பில் 362 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. மேலும் வரும் ஆண்டுகளில் ஐ.ஐ.டி சென்னை மூலமாக 100 ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் அனைத்தும் சென்னை ஐ.ஐ.டி சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது.

இந்திய தொழில்நுட்ப கழகங்களின் வரலாற்றில் முதல்முறையாக விளையாட்டு ஒதுக்கீட்டின் படி சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவா் சோ்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவா்கள் ஐ.ஐ.டி-களுள் நுழைய ஒரு வாய்ப்பாக அமையும். உலகின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக சென்னை ஐ.ஐ.டி-யை மாற்றுவதே எங்களுடைய நோக்கம் என்றாா் அவா்.

பின்னா் இந்திய பாதுகாப்புத் துறை செயலா் கிரிதா் அரமனே, இசைக்கலைஞா் பிரசன்னா ராமஸ்வாமி உள்ளிட்டோருக்கு சிறந்த முன்னாள் மாணவா்களுக்கான விருதினை சென்னை ஐ.ஐ.டி இயக்குநா் வி. காமகோடி வழங்கினாா்.