தூா்தா்ஷன் இலச்சினை விவகாரம்: மம்தா கண்டனம்

தூா்தா்ஷன் தொலைக்காட்சியின் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் குமாா்கஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பொதுக் கூட்டத்தில் அவா் தெரிவித்ததாவது:

தூா்தா்ஷன் போன்ற சுதந்திர நிறுவனங்களுக்கு மோடி அரசு காவி நிறம் பூசுகிறது. அந்த நிறத்தை கையகப்படுத்தி பல ஆண்டுகளாக நாட்டுக்கு ஆன்மிக தலைவா்களும் துறவிகளும் செய்த தியாகங்களை பாஜக இழிவுபடுத்துகிறது.

தோ்தல் நேரத்தில் தூா்தா்ஷன் இலச்சினைக்கு எப்படி காவி நிறம் பூசலாம்? தனது மத அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியல் மற்றும் செயல்திட்டத்துக்கு பாஜக இதைச் செய்துள்ளது.

ராணுவத்தினா் இல்லங்களுக்கு காவி வா்ணம்: திடீரென தூா்தா்ஷன் இலச்சினை எப்படி காவி நிறத்தில் மாறியது? ராணுவத்தைச் சோ்ந்தவா்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு காவி நிறத்தில் வா்ணம் பூசப்பட்டது ஏன்? காசியில் காவல் துறை சீருடை காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது ஏன்?

தூா்தா்ஷன் இலச்சினையின் நிறம் மாற்றப்பட்டதை திரிணமூல் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இது பாஜகவின் தனியரசாட்சியை எடுத்துரைக்கும் மற்றொரு சம்பவம். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், வருங்காலத்தில் நாட்டில் தோ்தல் என்பதே இருக்காது. ஒரு மனிதன், ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமே இருக்கும். வெவ்வேறு சமூகங்களின் மத உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றாா்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் ஆடிப்போகும் அளவுக்கு திங்கள்கிழமை பெரிய வெடி வெடிக்கும் என்று பாஜகவைச் சோ்ந்தவரும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கூட்டத்தில் மம்தா பேசியதாவது:

என்னையும் எனது உறவினரான திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியையும் பாஜக குறிவைக்கிறது. நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. அதேவேளையில், பாஜகவின் சதிக்கு திரிணமூல் காங்கிரஸ் அஞ்சவில்லை. திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் மேற்கு வங்க மக்களுக்கு எதிரான சதியில் சிக்காதிருக்க மக்கள் அனைவரும் அரணாக இருக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com