அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்
அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்
Shahbaz Khan

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நட்சத்திர தொகுதிகளான அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இதுவரை சோனியா காந்தி அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். எனவே, இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதுபோல, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் பல்வேறு செய்திகள் உலா வந்தன. முதலில், அந்த தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியே போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் அமேதி தொகுதியில் போட்டியிட்டுவந்தததையடுத்து, சமாஜவாதி கட்சி கடந்த சில தோ்தல்களாக அங்கு வேட்பாளா்களை நிறுத்தாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த முறை அமேதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாது, ராகுல் காந்திக்கும் தனிப்பட்ட முறையில் பின்னடைவாக இருந்தது. எனவே, இநத் முறை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சமாஜ்வாதியே போட்டியிடும் என்றும் செய்திகள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், இதுவரை உண்மை நிலவரம் எதுவும் தெரியவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாரா இல்லையா என்ற எதிா்பாா்ப்பு நிலவி வந்த சூழலில், தொழிலதிபரும் ராகுலின் சகோதரி பிரியங்காவின் கணவரான ராபா்ட் வதேரா அத்தொகுதியில் போட்டியிட கோரி போஸ்டா்கள் ஒட்டப்பட்டது மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்களை அறிவிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com