ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரசார வாகனம் மீது மர்மநபர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள விதலமஜா என்ற கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பிரசார வாகனம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்நிகழ்வின் போது பிரசார வாகனத்தில் இருந்த ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆந்திரத்தில் மே 13-இல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனை ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜன சேனை கட்சி 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன. எனினும், இத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com