மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

மகாதேவ் செயலி மோசடி வழக்கில் கைதாவதிலிருந்து தப்பிக்க 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்
சாஹில் கான்
சாஹில் கான்

மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகா் சாஹில் கானை சத்தீஸ்கரில் ஞாயிற்றுக்கிழமை காலை மும்பை காவல்துறை கைது செய்தது.

இணையவழி தளங்களில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டி விளையாட மகாதேவ் பந்தய செயலி ஏற்பாடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தான் கைது செய்யப்படப்போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த சாஹில்கான், கைது செய்யப்படாமல் தவிர்க்க, கடந்த நான்கு நாள்களாக ஆறு மாநிலங்களுக்கு பயணம் செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செயலி வழியாக விளையாடப்பட்ட விளையாட்டுகள், செயலியின் உரிமையாளா்கள் லாபம் அடையும் வகையிலும், பந்தயம் கட்டி விளையாடுவோருக்கு நஷ்டம் ஏற்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஸ்டைல், எக்ஸ்க்யூஸ் மி போன்ற நகைச்சுவைப் படங்களில் நடத்து புகழ்பெற்ற 47 வயது நடிகர் சாஹில் கான், ஏப்ரல் 25ஆம் தேதி மகாராஷ்டிரத்தை விட்டுக் கிளம்பியிருக்கிறார். அவர் 4 நாள்களில் 1800 கிலோ மீட்டர் பயணித்து 6 மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார். கோவார், அங்கிருந்து கர்நாடகம், ஆந்திரம் என பயணித்து சத்தீஸ்கரில் ஞாயிற்றுக்கிழமை காலை கைதாகியிருக்கிறார்.

இந்த மோசடி தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், மகாதேவ் செயலியின் உரிமையாளா்களான சத்தீஸ்கரை சோ்ந்த ரவி உப்பல், செளரவ் சந்திராகா் ஆகியோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மோசடி மூலம் சுமாா் ரூ.6,000 கோடி திரட்டப்பட்டதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலுக்கு ரவி உப்பலும் செளரவ் சந்திராகரும் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை சந்தேகித்துள்ளது. கடந்த ஆண்டு சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக 9 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மகாதேவ் செயலி உரிமையாளா்களுக்கும், மகாராஷ்டிரத்தின் சில நிதி நிறுவனங்கள் மற்றும் மனை விற்பனை நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக சாஹில் கான் உள்பட 32 போ் மீது மும்பை காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக ஹிந்தி நடிகா் சாஹில் கானிடம் மும்பை காவல் துறையின் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அண்மையில் விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் சாஹில் கானின் முன்ஜாமீன் மனுவை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவரை சத்தீஸ்கரில் மும்பை காவல் துறையின் எஸ்ஐடி கைது செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com