புது தில்லி: காவிரி ஆற்றுப்படுகையில் ஏற்பட்டுள்ள தற்போதைய கடுமையான தட்ப வெட்ப சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல என காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் (சி.டபிள்யு.ஆர்.சி.) 95-ஆவது கூட்டம் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் உறுப்பினர்கள் ஆர். சுப்பிரமணியன் (காவிரி தொழில் நுட்பக் குழு), எம். சுப்பிரமணியன், (தமிழக அரசின் தலைமைப் பொறியாளர்), கர்நாடக மாநில உறுப்பினர் மகேஷா (எம்.டி. காவிரி நீரவாணி நிகம்) , கேரள மாநில உறுப்பினர் ப்ரியேஷ், புதுச்சேரி தலைமைப் பொறியாளர் கே.வீரசெல்வம், மத்திய நீர்வள கோவைப்பிரிவு தலைமைப் பொறியாளர், இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்போதைய நீரின் இருப்பு, எதிர் நோக்கும் பருவ மழை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், காவிரியில் பெறப்பட்ட நீர் அளவு குறித்த விவரங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் தமிழக உறுப்பினர் குறிப்பிடுகையில், பிலிகுண்டுலுவில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 -ஆம் தேதி வரையில் பெறப்பட்ட நீர் அளவு 2.5 டிஎம்சி. ஆனால், தரப்படவேண்டிய நீர் அளவான 7.5 டிஎம்சியில் 5 டிஎம்சி வரை பாக்கி உள்ளது என்றார்.
மேலும், தற்பொழுது கர்நாடகத்தின் 4 முக்கிய அணைகளிலும் (சுமார் 25 டிஎம்சி) தண்ணீர் இருப்பு போதுமானதாக உள்ள நிலையில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஒட்டங்களுக்குத் தேவைக்கு (சுற்றுச்சூழல் குறைபாட்டு நீர்) பிலிகுண்டுலுவில் நிகழ் மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்க வலியுறுத்துமாறு குழுவை தமிழகம் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
கர்நாடக உறுப்பினர் கூறுகையில், குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக தண்ணீர் அணைகளில் இருப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்றார். மேலும், இந்திய வானிலை ஆய்வுத் துறை உறுப்பினரும், கர்நாடகத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக, "பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 -ஆம் தேதி வரை கோடைகால பருவ மழை இயல்பைவிட மிகக் குறைவாகவே பெய்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கும் காவிரிப் படுகையில் வறட்சியான வானிலையே நிலவும்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் நீண்ட விவாதம் நடைபெற்ற நிலையில், குழுவின் தலைவர் வினீத் குப்தா, "வரும் மே மாதத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான 2.5 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் வழங்க பரிந்துரைக்கிறோம். அதே சமயத்தில் கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விட கூறி உத்தரவிடுவது சரியான அறிவுரையல்ல. கடுமையான வெப்பம் நிலவுகிறது. தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், சரியான பயன்பாட்டிற்கு சென்றடையாது. தற்போது பாசனத் தேவையும் இல்லை. இதனால், இரு மாநிலங்களிலும் இருப்பு நீரை குடிநீர் மற்றும் சுற்றுப்புறச் சூழல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், "காவிரி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மே 16- ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிலைமையை மீண்டும் ஆராயப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு 20 டிஎம்சி உள்ளது. இதில் குடிநீர் உள்ளிட்ட தேவைக்காக 1,200 கன அடி வெளியேற்றப்படுகிறது. கடந்த 2023 ஜூன் முதல் 2024 ஏப்ரல் வரை பிலிகுண்டுலுவில் 78 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையின்படி தமிழகத்திற்கு தர வேண்டிய 174.497 டி.எம்.சி. தண்ணீர் போன்ற புள்ளிவிவரங்களும் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

தமிழிசை சௌந்தரராஜன் சொத்து விவர முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


