

முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமே பாஜகவின் வேலை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.
வக்ஃப் வாரிய சட்டம் 1995-இல் திருத்தங்களை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த வாரத்தில் நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் பரவின.
இந்த திருத்தங்கள் மூலம் வக்ஃப் வாரியத்தின் சொத்துகளில் வாரியத்துக்கான உரிமையை குறைக்கும் விதிமுறைகள் கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருத்தங்கள் குறித்து சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
“ஹிந்து - முஸ்லிம் பிரச்னை அல்லது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளை பறிப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை. சுதந்திரமாக செயல்படுவதற்காகவும், அவர்களின் மதத்தையும், அவர்களின் முறையையும் பின்பற்றுவதற்கான உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த திருத்தங்களை நாங்கள் எதிர்ப்போம். இடஒதுக்கீடு பற்றி கவலைப்படுவோர், தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும், ” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பல செல்வந்தர்கள் தங்களின் சொத்துகளை கடவுளுக்கு தானமாக வழங்கினர். இந்த சொத்துகளை வக்ஃப் சொத்துகள் என்று கூறுகின்றனர்.
இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முஸ்லிம்களுக்கான கல்வி மேம்பாடு, பள்ளி வாசல் பராமரிப்பு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.
இந்த சொத்துகளை நிர்வகிக்க வக்ஃப் வாரிய சட்டம் இயற்றப்பட்டு மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வாரியங்களின் கீழ் தற்போது 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.