

வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம்களை மகிழ்விப்பதற்காக, அன்று என்னை நாட்டைவிட்டு வெளியேற்றினார், இன்று அதே முஸ்லிம்கள் அவரை வெளியேற்றியிருக்கிறார்கள் என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கருத்து வெளியிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக கடந்த மாதம் வங்கதேசத்தில் உருவான மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், இது குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன், பிரதமர் ஷேக் ஹசீனாவால் வெளியேற்றப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த தன்னுடைய தாயைப் பார்க்க முடியாமல், வங்கதேச முஸ்லிம் மக்களை மகிழ்விப்பதற்காக தன்னை நாட்டை விட்டு வெளியேற்றினார். இன்று அதே முஸ்லிம்களைக் கொண்ட மாணவர் அமைப்பு, வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனாவை வெளியேற்றியிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் வன்முறை
ராணுவம் உள்ளிட்ட அரசுப் பணிகளில், வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் மாணவர்கள் அமைப்பினரின் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்து கடந்த வார இறுதியில் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்தப் போராட்டத்தில் சுமார் 100 பேர் பலியாகினர்.
போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியாமல் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டே வெளியேறினார். இந்தத் தகவலை ராணுவ தலைமைத் தளபதி வாக்கர்-உஸ்-ஸமான் உறுதி செய்திருந்தார்.
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் இந்தியா வந்துள்ளார். அவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், சமயங்களுக்கும் இஸ்லாமுக்கும் எதிராக எழுதி வந்தார், பெண்ணியத்தைப் பற்றி எழுதியதால் உலகளவில் பெயர் பெற்றார், ஆனால், இஸ்லாமுக்கு எதிராக எழுதியதால், அவர் வங்கதேசத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார், வங்கதேசத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு, 1999ஆம் ஆண்டு ஸ்வீடனில் இருந்தார். பிறகு இந்தியாவுக்கு வந்து தில்லியில் வசித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.