
ஹமாசலப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளம், ஹிமாசலம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. கடந்த வாரம் கேரளத்தின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதையடுத்து, ஹிமாசலில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த நிலையில், ஹிமாசலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிர்மௌர், சம்பா, சிம்லா, குலு மற்றும் மண்டி மாவட்டங்களின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, ஷில்லாரூவில் அதிகபட்சமாக 86.4 மிமீ மழையும், அதைத் தொடர்ந்து பாகி (76.6 மிமீ), சுந்தர்நகர் (64.2 மிமீ), மண்டி (60.2 மிமீ), கோஹர் (57.4 மிமீ), ஜோகிந்தர்நகர் (53 மிமீ), பண்டோ (50 மிமீ), பாலம்பூர் (48.8 மிமீ), தர்மஷாலா (38 மிமீ), குஃப்ரி (24 மிமீ), காங்க்ரா (22.6 மிமீ), தௌலகுவான் (22 மிமீ), நர்கண்டா (20 மிமீ) மற்றும் மணாலி (15 மிமீ). மழை பதிவாகியுள்ளது.
ஜூன் 1ல் தொடங்கிய ஆகஸ்ட் 8 வரையிலான காலகட்டத்தில் இதுவரை சராசரியாக 307.9 மி.மீ மழையைப் பெற்றுள்ளது. இயல்பு மழையின் அளவு 435.5 மி.மீ. ஆகும். ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஹிமாசலில் 80.8 மிமீ மழைப் பதிவாகியுள்ளது,
புதன்கிழமை பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் 109 சாலைகள் மூடப்பட்டன. மண்டியில் 37, சிம்லாவில் 29, குலுவில் 26, காங்க்ராவில் 6, கின்னார் மற்றும் லாஹவுல் & ஸ்பிதியில் தலா நான்கு, சிர்மூரில் இரண்டு மற்றும் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஒன்று ஆகும்.
மேலும், 58 மின்சாரம் மற்றும் 15 நீர் வழங்கல் திட்டங்கள் தடைப்பட்டுள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால், சில இடங்களில் நிலச்சரிவும், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பயிர்கள், பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் குடிசை வீடுகள் சேதமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.787 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.