
கேரளத்தின் வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய சோகமான தருணங்களை பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் பகிர்ந்துள்ளார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவிய நான்கரை ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த தீபா, வயநாட்டில், தான் 5 நாள்களிலும் அனுபவித்த சோக உணர்வுகளைப் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.
தீபா பேசியதாவது, ``வயநாட்டில் சிலர் தங்களது குடும்பத்தினரைக் காணவில்லை என்று கூறிவந்தனர். ஆனால், அவர்கள் இறந்திருக்கக் கூடும் என்று கூறியும், நம்பாமல், அதனை ஏற்க மறுத்து விட்டனர்.
ஆனால், அவர்களே அடுத்தடுத்த நாள்களில் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு, சவக்கிடங்கிற்கு வந்தனர்; மேலும், மீட்கப்பட்ட உடல்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.
அதுமட்டுமின்றி, சிலரது உள்ளுறுப்புகள், துண்டிக்கப்பட்ட கைகால்கள் மற்றும் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு நசுக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.
சிலர், தங்களின் உறவினர்களை, துண்டிக்கப்பட்ட விரல், துண்டிக்கப்பட்ட உறுப்பைப் பார்த்துதான் உடல்களை அடையாளம் காண வேண்டியிருந்தது.
பல நேரங்களில், சவக்கிடங்கிற்குக் கொண்டு வரப்பட்ட உள்ளுறுப்புகள், மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பதைக்கூட அறிய முடியவில்லை.
சவக்கிடங்கு முழுவதும் சிதைந்த உடல்களின் துர்நாற்றமும், சடலங்களில் இருந்து வெளிவந்த வாயுக்களும் பார்வையை மங்கச் செய்தன’’ என்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் தீபா என்பவர்தான் கேரளத்தின் முதல் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், தீபாவின் மகள் இரத்த புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து, வாகனம் ஓட்டுவதில் இருந்து தீபா ஓய்வுபெற்றார். தீபாவுக்கு, ஒரு மகனும் உள்ளார்.
இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உறைவிப்பான் பெட்டிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் தேவைப்படுவதை அறிந்த பிறகு மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்காக வயநாட்டிற்கு சென்றுள்ளார். மேலும், மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்ட விரும்புவதாக தீபா தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உருக்குலைந்தன.
நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். மேலும் பலரை காணவில்லை. எனவே, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டக் கூடும். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டாலும், இன்னும் 138 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஆக. 10, சனிக்கிழமையில் கேரளத்தின் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கல்பெட்டாவுக்கு சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.