/

ஆட்டோ சங்கர் பாணியில் உ.பி. கொலைகாரர்: 9 பெண்களைக் கொன்றவரைக் காட்டிக்கொடுத்த ஒரே சாட்சி!

ஆட்டோ சங்கர் பாணியில் உ.பி. கொலைகாரர் கைதானார். 9 பெண்களைக் கொன்றவர் கைதானதன் பின்னணி

News image
கொலைகாரர் குல்தீப் கைது
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:22 am

DIN

ஆட்டோ சங்கர் பாணியில், உத்தரப்பிரதேசத்தில் ஒன்பது பெண்களைக் கொன்ற தொடர் கொலைகாரர், பல தீவிர தேடுதல்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

சைக்கோ கொலையாளியால், பரேலி பகுதியில் பெண்களுக்கு அச்சம் ஏற்பட்டதோடு, காவல்துறைக்கு இந்த வழக்கு சவாலாகவும் மாறியது.

அனைத்து கொலைகளிலும் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டது ஒன்றுபோல இருந்தது. இந்த கொலைகாரரை தேடும் நடவடிக்கைக்கு தலாஷ் என்று பெயரிட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியை தொடங்கினர். சம்பவம் நடந்த பகுதிகளில் பதிவான 1.5 லட்சம் செல்போன் எண்களை ஆய்வு செய்ததோடு, 1500 சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வந்தனர்.

கொலையாளியைப் பிடிக்க 22 காவலர்கள் அடங்கிய தனிப்படை, 150 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், 1.5 லட்சம் செல்லிடப்பேசிகளை ஆராய்ந்தது, 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி மையம் என தீவிர தேடுதல் பணிக்குப் பிறகு தொடர் கொலைகாரர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒன்பது பெண்களையும் ஒன்று போல புடவைகளால் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததால், அனைத்துக் கொலைகளையும் ஒருவரே செய்திருக்கலாம் என்ற கணிப்பில் காவல்துறையினர் தேடியபோது கைதானவர்தான் குல்தீப் குமார் கங்வார்.

சில நேரில் பார்த்த சாட்சியங்களே முக்கிய ஆதாரமாக மாறியது...

46 வயது பெண் கொலையில், சிலர், கொலையாளியை நேரில் பார்த்ததாக அளித்த சாட்சியத்தை வைத்து அவர்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் குல்தீப்பின் முதல் உருவம் வரையப்பட்டது. இதன் அடிப்படையில், கொலைச் சம்பவங்கள் நடந்த அனைத்துப் பகுதிகளிலும் குல்தீப்பின் உருவம் பதிவாகியிருந்ததை வைத்து காவல்துறையினர் குல்தீப்தான் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.

38 வயதாகும் குல்தீப், கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். இவர் பெண்களை கொலை செய்துவிட்டு, சேலையால் கழுத்தை நெறித்துக் கொல்வது, முடிச்சுப்போடுவது போன்றவை, ஒரே கொலைகாரர்தான் என்பதைக் காட்டிக் கொடுத்ததோடு, இது திட்டமிட்ட ஒரே நபர் கொலை செய்து வருவதாகவும் காவல்துறை சந்தேகிக்க அடிப்படையாக அமைந்தது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை 9 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களைக் கொலைசெய்துவிட்டு அவர்களது உடைமைகளை அவர்களது நினைவுப் பொருள் போல கொலைகாரர் வைத்திருந்ததையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் பயன்படுத்திய பொட்டு, உதட்டுச்சாயம் போன்றவை கொலைகாரரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குல்தீப் சிறுவனாக இருந்த போது, தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார், அவரது சித்தி, உடல் ரீதியாக குல்தீப்பை கொடுமை செய்ததால் ஏற்பட்ட மனநிலை பாதிப்புதான் பெண்கள் மீதான வெறுப்பாக மாறி, 9 கொலைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு மனநிலை பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

முதற்கட்டமாக 9 பெண்களும் ஒன்றுபோல கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்த காவலர்கள் உடனடியாக மனநல நிபுணர்களின் உதவியை கேட்டனர். அவர்கள் விசாரணையில் கிடைத்த தகவல்களைப் பார்த்து, அவர் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்றும், தனியாக இருக்கும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொலை செய்வதால் ஒரே நபராக இருக்கலாம் என்றும் சந்தேகங்களை முன்வைத்தனர்.

இப்பகுதியில் கடந்த 13 மாதங்களில் 11 கொலைகள் நடந்துள்ளன. குல்தீப் 6 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இன்னும் மூன்று கொலைகளும், குல்தீப் பாணியில்தான் இருக்கிறது. எனவே அவருக்கு எதிராக ஆதாரங்கள் திட்டப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.