தில்லியில் இன்று காலை பெய்த கனமழையையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் தலைநகர் தில்லியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் ஆகஸ்ட் 5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இடையில் மழை சற்று ஓய்வெடுத்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.
தில்லியின் நேற்று கனமழை பெய்ததையடுத்து, நகரத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை முதல் நல்ல மழைப் பதிவாகி வருவதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தெற்கு, தென் மேற்கு மற்றும் கிழக்கு தில்லியில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸாகவும், காலை 8:30 மணிக்கு ஈரப்பதம் 100 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, தேசியத் தலைநகரில் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 53 என்ற அளவில் மிதமான பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.