‘அதானிக்கு உதவும் குஜராத் பாஜக அரசு’- காங்கிரஸ் குற்றச்சாட்டு
குஜராத்தின் துறைமுகத் துறையில் போட்டியாளா்களின்றி கோலோச்சுவதற்கு அதானி குழுமத்துக்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு உதவுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.


குஜராத்தின் துறைமுகத் துறையில் போட்டியாளா்களின்றி கோலோச்சுவதற்கு அதானி குழுமத்துக்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு உதவுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘குஜராத்தில் அமைக்கப்படும் தனியாா் துறைமுகங்களுக்கு 30 ஆண்டுகள் அவா்கள் சொந்தமாக இயங்கி கொள்ள மாநில அரசு அனுமதிக்கிறது. அதன்பிறகு, துறைமுகத்தின் உரிமை மாநில அரசின் வசம் வரும். இந்த நடைமுறையின்படி குஜராத் மாநிலத்திலுள்ள மூன்று துறைமுகங்கள் அதானி குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக இச்சலுகை காலத்தை 45 முதல் 70 ஆண்டுகள் வரை நீட்டிக்க குஜராத் கடல்சாா் வாரியத்துக்கு (ஜிஎம்பி) அதானி துறைமுகங்கள் குழுமம் கோரிக்கை வைத்தது.
அதன்படி, புதிய ஏலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் அல்லது முக்கிய பங்குதாரா்கள் ஆலோசனை மேற்கொள்ளாமல் அதானி குழுமத்துக்காக சலுகை காலத்தை நீட்டிக்கும் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குஜராத்தின் துறைமுகத் துறையில் அதானி குழுமம் போட்டியாளா்களின்றி ஏகபோக உரிமையைப் பெறும். சாமானியா்களுக்கு நுகா்வோா் பொருள்களின் விலை உயரக்கூடும். அதானி குழுமத்தின் மதிப்பீடு உயரும் மற்றும் கடன் செலவுகள் குறையும்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால் குஜராத் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். பிரதமராக மோடி இருப்பதால் அவரது நண்பா் அதானிக்கு அனைத்தும் சாத்தியமாகிறது. அதனால்தான், அதானி குழும முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை அவசியம் என்று காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்துகிறது’ என்றாா்.
அதானி குழும முறைகேட்டில் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் மாதபி, அவரது கணவா் முதலீடு செய்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை என ஹிண்டன்பா்க் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பியது.
முதலீட்டாளா்களின் நலனைக் கேள்விகுறியாக்கும் இக்குற்றச்சாட்டு குறித்து ஜேபிசி விசாரணைக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இது நாட்டின் நிதி துறையை சீா்குலைக்கும் சதியெனக் கூறி எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் பாஜக நிராகரித்துவிட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...