மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்ாக கூறி சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளன.
இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்து திகாா் சிறையில் அடைத்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவரை சிபிஐயும் கைது செய்தது.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியபோதிலும், சிபிஐ வழக்கில் அவா் தொடா்ந்து திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரியும், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளாா்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜரிவால் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி, ‘கேஜரிவாலின் உடல்நலன் கருதி, அவருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்தனா். அத்துடன் தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராக கேஜரிவால் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.