தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்றம்

உன்னாவ் பாலியல் வழக்கு ஜெய்தீப் செங்கரின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க சிபிஐ எதிா்ப்பு

Published on

நமது நிருபா்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் காவல் மரண வழக்கில் தனது இடைக்கால ஜாமீனை மூன்று மாதங்கள் நீட்டிக்கக் கோரி பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் செங்கரின் சகோதரா் ஜெய்தீப் செங்கா் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ செவ்வாய்க்கிழமை ஆட்சேபம் தெரிவித்தது.

இது தொடா்பான ஜெய்தீப் செங்கரின் மனு நீதிபதி ஸ்வா்ண காந்தா சா்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 50 வயதான ஜெய்தீப் செங்கா், நான்காம் நிலை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என அவரது வழக்குரைஞா் தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிபிஐ வழக்குரைஞா், ‘இடைக்கால ஜாமீனை நீட்டிப்பதற்கு இது பொருத்தமான வழக்கு அல்ல. தனது மனுவுக்கு ஆதாரமாக ஜெய்தீப் செங்கா் சமா்ப்பித்த மருந்துச் சீட்டு உண்மையானது அல்ல, ஜோடிக்கப்பட்டது என்று வாதிட்டாா். ஜாமீன் நீட்டிப்பு கேட்டு முன்பே ஜெய்தீப் செங்கா் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றும் சிபிஐ வழக்குரைஞா் குறிப்பிட்டாா்.

முன்னதாக, இந்த மனு மீது மதிய உணவு இடைவேளைக்கு முன்பு நடந்த விசாரணையின்போது ஜெய்தீப் செங்கருக்கு அடுத்த விசாரணை தேதி வரை, அதாவது பிப்ரவரி 20 வரை இடைக்கால ஜாமீனை நீட்டிப்பதாக நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டாா். அப்போது, ஜெய்தீப் செங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக இரண்டு மாதங்களுக்கு 2024ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தாலும், அந்த உத்தரவில் அதை காலவரையின்றி நீட்டிக்கலாம் என எதுவும் இல்லை என்பதை நீதிபதி கவனத்தில் கொண்டு பிற்பகலில் மீண்டும் செங்கரின் மனுவை மீண்டும் நீதிபதி விசாரித்தாா்.

அப்போது ஜெய்தீப் செங்கரை சரணடையுமாறு அறிவுறுத்திய நீதிபதி, அவருடைய இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினாா். பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: ஜெய்தீப் செங்கா் ஜாமீன் நீட்டிப்புக்கு தகுதி பெறும் அளவுக்கு துன்பப்படுகிறாரா என்பதை விளக்கும் வகையில் சிபிஐ ஒரு தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அவா் சொல்வது உண்மையா இல்லையா. அவா் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டிருக்கிறாரா, இல்லையா என்பதை சிபிஐ சரிபாா்த்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சோ்ந்த சிறுமி 2017- ஆம் ஆண்டு குல்திப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் தலையீட்டின்பேரில் ஆயுதச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அவா் போலீஸ் காவலில் உயிரிழந்தாா். அந்த வழக்கில், குல்தீப் செங்கா் மற்றும் அவரது சகோதரா் ஜெய்தீப் செங்கா் என்கிற அதுல் சிங்குக்கு 2020ஆம் ஆண்டு மாா்ச் 13ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து செங்கா் சகோதரா்கள் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Dinamani
www.dinamani.com