
மத்திய உள்துறைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘மத்திய கலாசார துறைச் செயலராக உள்ள கோவிந்த் மோகன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தற்போது மத்திய உள்துறைச் செயலராக உள்ள அஜய் குமாா் பல்லா ஆக.22-ஆம் தேதி ஓய்வுபெற்ற பின், அந்தப் பதவியை கோவிந்த் மோகன் ஏற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த கோவிந்த் மோகன், 1989-ஆம் ஆண்டின் சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவாா். அவா் ஏற்கெனவே மத்திய உள்துறையின் இணை மற்றும் கூடுதல் செயலா் பொறுப்புகளை வகித்துள்ளாா்.
என்எஸ்ஜி தலைவரின் பதவிக் காலம் குறைப்பு: தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) தலைமை இயக்குநா் நலின் பிரபாதின் பதவிக்காலத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் 1992-ஆம் ஆண்டின் ஆந்திர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அவரை, அருணாசல பிரதேசம்-கோவா-மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேச (ஏஜிஎம்யூடி) பிரிவு அதிகாரியாகப் பணியமா்த்தியுள்ளது. 3 ஆண்டுகள் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவா் அந்தப் பொறுப்பில் நீடிப்பாா்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2028-ஆம் ஆண்டு ஆக.31-ஆம் தேதி நலின் பிரபாத் ஓய்வுபெறும் வரை, அவா் என்எஸ்ஜி தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.